• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • காரைக்குடி சட்டமன்ற தொகுதி நிலவரம்

காரைக்குடி சட்டமன்ற தொகுதி நிலவரம்

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 1991-ம் ஆண்டுக்கு பிறகு தி.மு.க போட்டியிடவேயில்லை.

 • Share this:
  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில்  காரைக்குடி சட்டமன்றத் தொகுதி காரைக்குடி, தேவகோட்டை என இரண்டு நகராட்சிகளை உள்ளடக்கிய மிக முக்கியமான தொகுதியாகும். இந்தியா விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர் கல்வி வளர்ச்சிக்காக தமிழகம் முழுவதும் பல கல்விச் சாலைகளையும் ஆய்வு கூடங்களையும் தமது சொந்த செலவில் நிறுவி தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்க வித்திட்ட வள்ளல் அழகப்பச் செட்டியார் பிறந்த ஊர் என்ற பெருமை பெற்றது காரைக்குடி.

  காரைக்குடிக்கு சிறப்பு சேர்ப்பவை:

  உலகப் புகழ்பெற்ற செட்டிநாடு காட்டன் (கண்டாங்கி சேலை ) கைத்தறி நெசவு சேலை, சுவையான செட்டிநாடு சாப்பாடு, பலகார வகைகள், பூஜை அறையை அலங்கரிக்கும் அரியக்குடி விளக்குகள், செட்டிநாடு எவர்சில்வர் பாத்திரம் உற்பத்தி, பழமை மாறாத  பாரம்பரியம் கொண்ட சுண்ணாம்பு கற்களலான பெரிய பெரிய அரண்மனை போன்ற நகரத்தார் வீடுகள், ஆயிரம் ஜன்னல் வீடு, விவசாயம், சிறந்த  கல்விக்கூடங்கள், மத்திய அரசின் மின் வேதியியல் ஆய்வுக்கூடம் அமையப்பெற்றுள்ளது தொகுதியின் சிறப்பம்சமாகும் .  தமிழ் திரைப்படத்தின் முன்னோடியாகவும், தென்னிந்திய திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராகவும் கருதப்படும்  ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியார் முதன் முதலாக ஸ்டூடியோ அமைத்ததும் இத்தொகுதிக்கு உட்பட்ட அமராவதிபுதூரில் தான். சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்ற மனோரமா, டைரக்டர் ராமநாராயணன், தயாரிப்பாளர்கள் முத்துராமன், பஞ்சு அருணாசலம், கரு.பழனியப்பன், பழ.கருப்பையா என எண்ணற்ற சினிமா நட்சத்திரங்களை தந்தது இந்த காரைக்குடி. பதிப்புலகில் கொடி கட்டி பறக்கும் பல பதிப்பங்களை நிறுவியவர்கள் இத்தொகுதிக்கு உட்பட்டவர்கள். கவிஞர் கண்ணதாசன் பயின்ற அமராவதி புதூர் குருகுலம் பள்ளி, அவருக்கான மணி மண்டபம் இத்தொகுதியில் உள்ளது.

  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் பகுதியாக  காரைக்குடி திகழ்ந்து வருகிறது கடந்த 2017 முதல் 2019 வரை 70 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ஆனால், சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை. ஆளும் எம்.எல்.ஏக்களும் அதை கண்டு  கொள்வதில்லை.  புவிசார் குறியீடு பெற்ற செட்டிநாடு கைத்தறி கண்டாங்கி சேலை  இங்குதான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் உற்பத்தியில் கடந்த காலங்களில் காரைக்குடி பகுதிகளில்  600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டிருந்தனர். செயல்படாத சங்கங்கள் மற்றும் விசைத்தறி வரவு வளர்ச்சி, குறைந்த கூலியால்  கைத்தறி நெசவு தொழில் நலிவடைந்து சுமார் 50  வீடுகளில் மட்டும்  கைத்தறி நெசவு தொழில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் ஜெயித்து எம்.எல்.ஏ.,வாக இருப்பவர்கள் இதை பற்றி சிந்திப்பது கூட இல்லை.

  காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் கட்சிகளில் வெற்றி:

  1952 முதல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 4, அதிமுக 4,  சுதந்திரா கட்சி 2, தி.மு.க., 2, தி.மு.க கூட்டணியில் பாஜக 1 (ஹெச் . ராஜா 2001 )  தமாக 1 முறையும் என கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன.

  2016 திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.ஆர் ராமசாமி -  93,419 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட பேராசிரியை கற்பகம் இளங்கோ - 75, 136 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் கட்சி 18,283  வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது .  1991-க்கு  பிறகு கடந்த 30  வருடங்களாக  காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க போட்டியிடவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் சொந்த தொகுதி என்பதால் ஒவ்வொரு தேர்தலும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது. இம்முறை தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தி.மு.கவினர் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு பலம் பொருந்திய அரசியல் கட்சியும், தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களும் தொகுதியில் தொடர்ச்சியாக வென்றதில்லை என்ற சரித்திரமும் உண்டு

  ஒவ்வொரு முறையும் தேர்தலில் நிற்கும்போது வேட்பாளர்கள் பல்வேறு வகையான வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் மக்களிடத்திலே அதிகம் உள்ளது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட  அரசியல்வாதிகளுக்கு தொகுதி முன்னேற்றத்தில்  அக்கறையில்லாததால் தொழில்துறையில் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் இல்லாத ஒரு நகரமாக தான் காரைக்குடி, தேவகோட்டை இன்று வரை உள்ளது. கல்வி வளர்ச்சியில் முன்னேறி இருந்தாலும் தொழில், வேலை வாய்ப்புகளில் இன்றுவரை பின்தங்கிய தொகுதியாகவே உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கிய போதும் ஆளும் கட்சியினர் தலையீட்டால் சிப்காட் திட்டமும் மூடப்பட்டு விட்டது.

  எம்.எல்.ஏ இராமசாமி


  2016 ல் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ இராமசாமி (காங்) கொடுத்த வாக்குறுதிகள் :

  இத்தொகுதியில் சட்டக்கல்லூரி, அரசு பெண்கள் கலை கல்லூரி கொண்டு வரப்படும் என்றார். ஆனால், இன்றுவரை அதற்கான நடவடிக்கை இல்லை. சட்டசபையில் பேசியுள்ளார். ஆளுங்கட்சியோ எதிர்கட்சி என்பதால் அவற்றை காதில் வாங்கவே இல்லை. மக்களின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. கோவிலூர் ரசாயன ஆலையை மூடுவேன் என்றார். அதற்கான போராட்டம் மட்டுமே நடைபெற்றது. ஆலை மூடப்படவில்லை.

  செய்தவை :

  தொகுதி நிதியிலிருந்து ரேஷன் கடைக்கு பல கட்டடங்கள் கட்டிக் கொடுத்துள்ளார். பல்வேறு இடங்களில் கீழ்நிலை சின்டெக்ஸ் தொட்டிகள் அமைத்து கொடுத்துள்ளார். குடிநீர் மேல்நிலை தொட்டி, பஸ் ஸ்டாப், பள்ளி கட்டடங்கள், ரோடு வசதிக்கு நிதி ஒதுக்கியுள்ளார். கமிஷன் வாங்காமல் நேர்மையாக தொகுதி நிதி முழுவதும் செலவிடப்பட்டுள்ளது. காரைக்குடி பாதாள சாக்கடை திட்ட பணியை விரைந்து நிறைவேற்ற கோரி கடைசி நேரத்தில் மக்களுக்காக சாலை மறியலில் ஈடுபட்டதால் தார் சாலை விரைந்து போடப்பட்டுள்ளது.  தொகுதி நிலவரம் (184) : காரைக்குடி.

  * கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் : 2,01,355

  * காங்கிரசை சேர்ந்த கே.ஆர்.ராமசாமி 93,419 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். மொத்த பதிவான வாக்குகளில் இது 46.4 சதவீதம்.

  * அவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் கற்பகம் இளங்கோ போட்டியிட்டார். அவர் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 75136. (37.32 சதவீதம்)

  * முதன்முறையாக களம் கண்ட நாம் தமிழர் கட்சி 5,344 வாக்குகளை பெற்று நான்காம் இடம் பிடித்தது.

  * தேசிய கட்சியான பி.ஜே.பி., ஐந்தாம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

  மொத்த வாக்குசாவடிகளின் எண்ணிக்கை : 345.

  வாக்காளர்கள் எண்ணிக்கை :

  ஆண்கள்                                                              : 1,54,905

  பெண்கள்                                                             : 1,60,399

  மூன்றாம் பாலின வாக்காளர்கள்      :            47

  மொத்தம்                                                              : 3,15,351 வாக்காளர்கள் உள்ளனர்  மக்களின் எதிர்பார்ப்பு :

  * வானம் பார்த்த பூமியான இங்கு விவசாயம் பெரிய அளவில் கைகூடாத நிலையில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்கு பெரிய அளவில் ஏதாவது ஒரு தொழிற்சாலை அமைய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 30 ஆண்டுக்கும் மேலான கனவு. அது இன்றும் தொடர்கிறது.

  * காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக்க வேண்டும் என்பதும் இதுவரை கானல் நீராகவே உள்ளது.

  * செட்டிநாட்டு பலகாரங்களுக்கு உலகளாவிய மவுசு இருந்தும், அதை முறைப்படுத்தி விற்பனை செய்வதற்குரிய பெரிய அளவிலான விற்பனை மையங்கள் எதுவும் இல்லை. அவற்றை உற்பத்தி செய்வோருக்கு எந்த வித உதவியும் இதுவரை வழங்கப்படவில்லை.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: