2023ம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, அரசு தலைமைக் கொறடா கோவி செழியன், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். தொடர்ந்து, ஆளுநருக்கு பேண்டு வாத்தியத்துடன் கூடிய காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது. ஆளுநர் உள்ளே வந்ததும் சபாநாயகர் இருக்கையில் அமர்வார். அவருக்கு அருகே சபாநாயகர் தனி இருக்கையில் அமருவார்.
காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை வாசிப்பார். மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அவற்றை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கைகள், புதிய திட்டங்கள் பற்றி சுமார் ஒரு மணிநேரம் ஆளுநர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.
காகிதம் இல்லாத சட்டசபை என்பதால், அவர்களின் உரைகள், சட்டசபையில் உள்ள தொடுதிரை கணினிகளில் திரையிடப்படும். ஆளுநர் மற்றும் சபாநாயகரின் உரை முழுவதும் இணையதளத்தில் நேரலை செய்யப்பட உள்ளது. உரையை சபாநாயகர் வாசித்து முடிந்ததும் அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதன் பின்னர் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்பட உள்ளது.
நாளை சட்டசபை கூடியதும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.யாக இருந்த திருமகன் ஈவெராவின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அன்று முழுவதும் அவை ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது. 11ம் தேதியன்று சட்டசபையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது விவாதிக்க எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்படுவார்கள். சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளில் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலுரையாற்ற உள்ளார்.
கூட்டத் தொடரில் புதிய சட்ட மசோதாக்கள், அரசு தீர்மானம் போன்றவை அவையில் வைக்கப்பட வாய்ப்புள்ளது. கேள்வி நேரமும் இடம் பெற உள்ளது. புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அந்தஸ்துடன் முதல் முறையாக சட்டப்பேரவைக்கு வருகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபையில் 10-வது இடம் அளிக்கப்பட்டுள்ளதால், சட்டசபையில் அமைச்சர்களுக்கான முதல் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுவார். கொரோனா தொற்று தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே உள்ளது என்றாலும், சட்டசபை கூட்டத்தின்போது அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற வழிகாட்டுதல் நெறிமுறை பின்பற்றப்பட உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: RN Ravi, TN Assembly, Udhayanidhi Stalin