சுந்தரனார் எழுதிய கவிதை வரிகளைச் சிதைக்காது முழுமையான பாடல் வரிகளை பயன்படுத்த வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநிலப் பாடமாக அங்கீகரித்தது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையில், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநிலப் பாடலாக அங்கீகரித்து அறிவித்துள்ளது. முதலில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்த்தாய் வாழ்த்திற்கான அரசின் அங்கீகாரத்தை மிகவும் வரவேற்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளிலும் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Also Read: ராஜேந்திர பாலாஜி எந்நேரமும் கைதாக வாய்ப்பு - பெங்களூருவில் பதுங்கலா?
தமிழ்நாட்டில் தமிழ் வாழ்த்துப்பாடலாக அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த’’ என்னும் பாடல் பாடப்பட வேண்டும் என்னும் கோரிக்கை 1913ஆம் ஆண்டைய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கை தீர்மானமாக இடம்பெற்றது. தொடர்ந்து கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் இப்பாடலை வாழ்த்துப்பாடலாக பாடி வந்துள்ளார்கள். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வழி வந்த பிறதமிழ்ச் சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப் பாடலாக இப்பாடல் பாடப்பட்டது.
ஆனால் அப்பாடல் முழுமையான பாடலாக இருந்தது. இதனைத் தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்று அக்காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த அண்ணாதுரைக்கு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கையாக எழுதி அனுப்பியும் வைத்தனர்.
ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் 'தமிழ்த் தெய்வ வணக்கம்' எனும் தலைப்பில் தமிழ்த்தாயை போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 1970ம் ஆண்டு நவ.,23ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணை வெளியிட்டார்.
Also Read: 3 மாணவர்கள் உயிரிழந்த நெல்லை பள்ளி விபத்தில் நடந்தது என்ன? மாவட்ட ஆட்சியர் விளக்கம்
அப்போதே அப்பாடலை முழுமையாகப் பயன்படுத்தாமல் அதில் சில வரிகளைத் தவிர்த்தது சர்சையானது. அவ்வரசாணையை தொடர்ந்து, தமிழகத்தில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின் போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு வருகிறது.
மனோன்மணியம் சுந்தரனார் என்று போற்றப்படும் திருவனந்தபுரம் பெருமாள் சுந்தரம் பிள்ளை அவர்கள், இருந்திருந்தால், தாம் எழுதிய இப்பாடலுக்கு கிடைத்த மாநில அரசின் அங்கீகாரத்தை நினைத்து பெரிதும் மகிழ்ந்திருப்பார். ஆனால் அப்பாடலை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தாமல், அதில் சில வரிகளை நீக்கி, திருத்திப் பயன்படுத்துவதை கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருக்கவே மாட்டார்.
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
சுந்தரனார் எழுதிய கவிதை வரிகளைச் சிதைக்காது முழுமையான பாடல் வரிகளை பயன்படுத்துவதே, அப்பாடலை எழுதிய சுந்தரனாருக்கும், நம் தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும், ஏன் அப்பாடலின் பொருளமைதிக்கும் நன்மை பயப்பதாக அமையும்.
Also Read: நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ஆகவே தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ் மீது நல்லெண்ணம் கொண்டு செய்த முயற்சியை, அரைகுறையாக செயல்படுத்தாமல், அவர் பதவி ஏற்ற போது எடுத்துக் கொண்ட,”என் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் செயலாற்றுவேன்” என்ற உறுதி மொழியின்படி கடவுள் நம்பிக்கை வரிகளைச் சிதைக்காமல், முழுமையாகப் பாடலைப் பயன்படுத்துவதே, தமிழ் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும், பாடுபட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமா மகேசுவரனாருக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும். இதை தாங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் செய்வீர்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, DMK, Tamil, Tamil Culture, Tn schools