சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கட்டப்படவுள்ள, 9 மாடி நிர்வாக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. அதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, முதலமைச்சர்
ஸ்டாலின் மற்றும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர். தலைமை நீதிபதியும், முதல்வரும் சேர்ந்து நிர்வாக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியதோடு,
நாமக்கல் மற்றும்
விழுப்புரம் மாவட்டங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்களை திறந்து வைத்தனர்.
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வணிக நீதிமன்றங்களையும் இருவரும் சேர்ந்து திறந்து வைத்தனர். தொடர்ந்து, கொரோனாவல் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உதவிகளை வழங்கினார். பின்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், சட்டத்தின் குரலாக மட்டுமின்றி மக்களின் குரலாகவும் ஒலிப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவை பாராட்டினார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த 480 வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கான, நிவாரண தொகையை தமிழக அரசு விரைவில் விடுவிக்கும் என்றார். தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியம் மூலம் வழங்கப்படும், வழக்கறிஞர்களுக்கான சேம நலநிதியை 10 லட்ச ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
Also Read : இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி - தமிழக மின் பற்றாக்குறையை சமாளிக்க அரசு முடிவு
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, நாட்டில் தங்களது மொழி மற்றும் கலாச்சார உரிமையை காப்பதற்கு தமிழர்கள் எப்போதும் முதலாவதாக வருவர் என பாராட்டினார். சமூகத்தின் தேவைக்கும், நீதிபதிகளின் மூளைக்கும் இடையே இடைவெளி இருக்கக் கூடாது என, திருக்குறளை சுட்டிக்காட்டி பேசினார்.
நீதித்துறையின் அனைத்து மட்டத்திலும் பெண்கள் இருக்கலாம் என்றும், ஆணும், பெண்ணும் நிகர் எனும் பாரதியாரின் கவிதையை குறிப்பிட்டார். நீதித்துறையை வலுப்படுத்துவதற்கு மொழி தடைகளை அகற்றுவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது, உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது போன்றவை அவசியம் என கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.