• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு - தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் வெளியீடு

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு - தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் வெளியீடு

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

மு.க.ஸ்டாலினை தலைமையிலான தி.மு.க அரசு தமிழ்ப் புத்தாண்டாக எந்த தேதியை கடைபிடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • Share this:
    தமிழ்ப்புத்தாண்டு குறித்த சர்ச்சை திமுக ஆட்சியில் ஒன்றும், அதிமுக ஆட்சியில் ஒன்றும் என ஆட்சிகள் மாறும்போது புத்தாண்டும் மாறுவதை கடந்த காலங்களில் தமிழக மக்கள் அறிந்திடாமல் இல்லை.

    தமிழருக்கு தனியாக தொடர் ஆண்டு முறை இல்லையாதலால், அவற்றை உருவாக்கவும், இலக்கிய வரலாற்று சான்றுகளை ஆய்வு செய்து, ஒருமித்த ஒரு முறையை கையாள்வது என தமிழறிஞர்கள் முடிவு செய்தனர். அதன்படி, 1935 -இல் தமிழறிஞர் மறைமலை அடிகளார் தலைமையில் பல அறிஞர்கள், சென்னையில்  ஒன்றுகூடி தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என முடிவு செய்து அறிவித்தனர். அதன்படி, திருவள்ளுவரின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக்கூட்டி திருவள்ளுவர் ஆண்டு தமிழாண்டாகக் கொள்வது எனவும் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில், கருணாநிதி தலைமையில் அமைந்த தமிழ்நாடு அரசு 1972-ம் ஆண்டு முதல் அரசுப் பயன்பாட்டிலும், ஆவணங்களிலும், திருவள்ளுவர் ஆண்டினை நடைமுறைப்படுத்தி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக 2006-2011-ம் கால கட்ட கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் 2008-ம் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம். எனவே, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று  அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு 23-8-2011-ம் ஆண்டு சித்திரை மாதம் தான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கப்படும் என்று அறிவித்தது.

    இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா, ‘தமிழ்ப் புத்தாண்டு, தை மாதம் தொடங்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது’ என்று அறிவித்தார். அதனையடுத்து, தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சி இருந்ததால் தமிழக அரசின் அறிவிப்பின்படி சித்திரை 1-ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. எனவே, தமிழ்ப் புத்தாண்டு மாற்றப்பட வாய்ப்பிருக்கும் என கூறப்பட்டது.

    இந்நிலையில்,  2022-ம் ஆண்டுக்கான அரசின் பொது விடுமுறை தேதிகளை குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘சித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தை 1 ஆம் தேதியை பொங்கல் என்று குறிப்பிட்டுள்ளது.

    மெட்ராஸ் ஸ்டேட்டில் இருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற,  நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாள் என்று 2019ல் அதிமுக அரசு அறிவித்தது. இனி 1967 ஜூலை 18ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட்டுக்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்படும் என்று தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதற்கு  ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: