மொரப்பூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தியதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுகவினர் நடத்திய வன்முறை தமிழக அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், ''தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், பேச்சாளரை மேடையிலேயே கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினரைத் தடுக்காமல், அங்கிருந்த காவல்துறை கைகளைக் கட்டியபடி வேடிக்கை பார்த்தது ஜனநாயகப் படுகொலையாகும். அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக முறையில் செயல்பட அனுமதிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான போராட்டங்களுக்கு
அனுமதி அளிக்கப்பட்டது.'' என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : நாம் தமிழர் மேடையில் திமுகவினர் அத்துமீறல்- சீமான் கண்டனம்
இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்துதெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சகிப்புத் தன்மையும், கருத்துரிமையை மதிப்பதும் தான் ஜனநாயக அரசியலின் அடிப்படை. அதை மீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்!
விமர்சனங்களுக்கு வன்முறைகளால் பதிலடி தரத் தொடங்கினால் தமிழகம் அரசியல் களமாக இருக்காது.. வன்முறைக்களமாக மாறிவிடும். அந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் அனைவரும் தடுக்க வேண்டும்! இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு: நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் சாட்டை முருகன் மீண்டும் கைது
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.