Home /News /tamil-nadu /

ஞாயிறு முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள் - தீவிர சோதனையில் காவல்துறை

ஞாயிறு முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள் - தீவிர சோதனையில் காவல்துறை

ஊரடங்கு

ஊரடங்கு

தமிழ்நாட்டில் இன்றைய முழு ஊரடங்கை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஞாயிறு முழு ஊரடங்கையொட்டி, சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கட்டுப்பாடுகளை மீறி அநாவசியமாக சுற்றித் திரிந்தவர்களை எச்சரித்தும், அபராதம் விதித்தும் அனுப்பி வைத்தனர்.

    தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, தொற்று பரவலை தடுக்க இரண்டாவது வாரமாக, ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னையில் 10 ஆயிரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்ட்ரல் ரயில் நிலையம், அண்ணா சாலை, கிண்டி கத்திப்பாரா பாலம் உள்ளிட்ட பகுதிகள் ஆள் அரவமற்று காட்சி அளித்தன. சென்னையில் 372 இடங்களில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், அத்தியாவசியமின்றி சுற்றித்திரிந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஊரடங்கை பயன்படுத்தி, வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக, ரயிலில் பயணம் செய்து சென்னை வந்தவர்கள் குற்றம்சாட்டினர். அதேசமயம், வாடகை ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகளை குறைவாகவே இயக்கப்பட்டன.

    சென்னையின் புறநகர் பகுதியான ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 109 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருமுல்லைவாயில், பட்டாபிராம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபடும் காட்சிகள் கழுகுப் பார்வையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23,975 பேருக்கு கொரோனா பாதிப்பு



    காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 1,100 போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் என மாவட்டம் முழுவதும் தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


    கிருஷ்ணகிரி எல்லையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், கர்நாடகா மாநிலத்தில் இருந்து அவசியமின்றி வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். அதே நேரம், அங்கிருந்து அவசர தேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்த வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

    தஞ்சை மாவட்டத்தில் 750 போலீசார் 85 இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காட்சியளிக்கப்பட்டிருந்தது.

    சேலத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய நபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அஸ்தம்பட்டி, 5 ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. விதிகளை மீறி ஏற்காடு செல்ல முயன்ற வாகனங்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.

    மதுரையில் நகரம் முழுவதும் மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளன. போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், முன்கள பணியாளர்கள் அடையாள அட்டையை காண்பித்து விட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    மதுக்கடைகள் மூடப்பட்டதால் கடலூர் மாவட்டம் சாவடியில் இருந்து மதுப்பிரியர்கள் புதுவைக்குப் படையெடுத்தனர். தென்பெண்ணை கரையோரம் உள்ள ஆற்றுப்பாதை வழியாக புதுச்சேரிக்கு சென்றவர்களைத் தடுக்க முடியாமல் போலீசார் தவித்தனர்.

    கரூரில் 30 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். வெளியே சுற்றுவோருக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கரூர் நகர சாலைகள் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காட்சியளித்தன.

    இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே, தமிழகத்தில் ஒரு வாரத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 3.45 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Corona Vaccine, CoronaVirus, Lockdown

    அடுத்த செய்தி