தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு, கடந்த பிப்ரவரி 26ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைதொடர்ந்து வேட்பு மனுத்தாக்கல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 6 கோடியே 26,7446 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதிமுக, திமுக, அமமுக-தேமுதிக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.
எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன், கமல்ஹாசன் மற்றும் சீமான் என ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களின் பரப்புரையால் தேர்தல் பிரசாரக் களத்தில் அனல்பறந்தது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த சூறாவளி தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 7 மணியுடன் நிறைவுபெற்றது. 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான பரப்புரை நேற்று மாலை நிறைவடைந்தது. அங்கு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதேபோல், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. மொத்தம் 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க...
அரவக்குறிச்சி தொகுதியில் 100 புதிய குளங்கள் வெட்டப்பட்டு நீர் நிரப்பப்படும்: பாஜக வேட்பாளர் அண்ணாமலை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. புதன்கிழமை காலை 7 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 144 தடை உத்தரவை ரத்து செய்ய கோரி, புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், முறையான காரணங்களை குறிப்பிடாமல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாதாடப்பட்டது.
தடை உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதாக புதுச்சேரி அரசு தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், 144 தடை உத்தரவுக்கு உரிய விளக்கம் அளிக்காவிட்டால், ரத்து செய்யப்படும் என தெரிவித்தனர்.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், உச்சகட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இடது ஜனநாயக முன்னணி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று கன்னூர் பகுதியில் வாகன பிரசாரம் மேற்கொண்டார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கலந்து கொண்டார்.
இதற்கிடையே, தமிழகத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் அனுப்பும் பணி இன்று காலை தொடங்குகிறது. வாகனங்கள் செல்ல முடியாத மலை கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்ட மன்ற தொகுதிகளில் பணிகள் விறுவிறுப் படைந்துள்ளன. 1,924 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை அனுப்பும் பணிகள் நடைபெறுகின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்