சென்னையில் எடப்பாடி பழனிசாமி: புதுச்சேரியில் நாராயணசாமி - போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கிவைப்பு

சென்னையில் எடப்பாடி பழனிசாமி: புதுச்சேரியில் நாராயணசாமி - போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கிவைப்பு

போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாராயணசாமி

சென்னையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அதேபோல புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கிவைத்தார்.

 • Share this:
  இளம்பிள்ளை வாதம் ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்கில் இந்தியாவில் 1978-ஆம் ஆண்டு முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் முக்கிய பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

  தமிழகத்தில் மட்டும் 43 ஆயிரம் மையங்களில் சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள அவரது வீட்டில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமைத் தொடங்கிவைத்தார். அதேபோல, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைச்சர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமைத் தொடங்கிவைத்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாமை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார் .

  புதுக்கோட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். காலை 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய சொட்டு மருந்து முகாமைத் தற்போது தொடங்கி வைத்தார். பெண்கள் கை குழந்தையுடன் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்து இருந்ததால் அவதிப்பட்டனர். ஆவடியில் அமைச்சர் பாண்டியராஜன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய போலியோ சொட்டு மருத்துவ முகாமையொட்டி உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மயிலாடுதுறை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா துவங்கி வைத்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: