தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் ஓய்கிறது சூறாவளிப் பிரச்சாரம்

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்தில் இன்றுடன் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தமிழகத்துக்கான தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26-ம் தேதி அறிவித்தது. அதிலிருந்து ஒரு வாரத்தில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியலை நிறைவு செய்தன அரசியல் கட்சிகள்.

  அதனைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தி.மு.க சார்பில் கூடுதலாக உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

  தேசியத் தலைவர்கள் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்களும் தமிழ்நாட்டு வந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேட்பாளர்கள் பலரும் அவர்களுடைய தொகுதிகளில் மக்களைக் கவரும் வகையில் வித்தியாசமான முறையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு தோசை போட்டு கொடுப்பது, துணி துவைத்து கொடுப்பது, பேண்ட் வாசித்து வாக்கு சேகரிப்பது என்று பல செயல்களைச் செய்தனர். கடந்த ஒரு மாத காலமாக இருந்த பரபரப்பு இன்றுடன் ஓயவுள்ளது.

  வழக்கமாக தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் மாலை 5 வரை தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும். இந்தமுறை 7 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என்று தமிழகத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அனுமதியளித்திருந்தார். அதனால், இன்று ஏழு மணிவரை தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்யவுள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: