வாக்குப்பதிவுக்கு இன்னும் ஏழே நாட்கள்... உச்சக்கட்ட பரப்புரையில் அரசியல்வாதிகள்

வாக்குப்பதிவுக்கு இன்னும் ஏழே நாட்கள்... உச்சக்கட்ட பரப்புரையில் அரசியல்வாதிகள்

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்

சட்டமன்றத் தேர்தலுக்கு 7 நாள்களே உள்ளநிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான ராணிப்பேட்டை சட்ட மன்ற தொகுதி வேட்பாளரான ஆர்.காந்தி(திமுக), ஆற்காடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜே.எல்.ஈஸ்வரப்பவன்(திமுக), சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் முனிரத்தினம்(காங்கிரஸ் ), அரக்கோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவுதமசன்னா ( விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகிய நான்கு வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘வருகின்ற ஆறாம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வீர்களா என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த ஸ்டாலின் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியை சேர்ந்த துரைமுருகன் அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தோல்வி பயம் வந்ததால் வாய்க்கு வந்தபடி பரப்புரை மேற்கொள்கிறார். ஊர்ந்து சென்று தவறா? என்று கேட்ட எடப்பாடி பழனிசாமி நான் என்ன பாம்பு பல்லி என்று கேள்வி எழுப்பினார். பாம்பு பள்ளியை விட துரோகம் கொடுமையான விஷம் என்று’ கடுமையாக விமர்சனம் செய்தார்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் மயிலாப்பூர், அண்ணாநகர், தி.நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘சென்னை கோட்டைக்காக நீங்கள் என்ன பண்ணிருக்கீங்க? புயல், வெள்ளம் வந்தாலும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக வந்தால் உங்க சொத்த அவுங்க பட்டா போட்டுக்குவாங்க. ஜெயலலிதா ஆட்சியில் தி.மு.க அபகரித்த 16 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பறிமுதல் செய்து கொடுத்தாங்க. வருண பகவான் கருணை காட்டி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்ப்பி வழியது. எங்கள் ஆட்சி வருவதற்கு இயற்கையே சாட்சி. தமிழ்நாட்டில் அனைத்து நீர் நிலைகளும் தற்போது தான் நிறைந்துள்ளது. இறைவன் எங்கள் பக்கம் உள்ளார்.

    இயற்கை எங்கள் பக்கம் உள்ளது. மக்கள் அனைவரும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கட்ட பஞ்சாயத்து செய்யும் தலைவர் நாட்டுக்கு தேவையா? கட்சி தலைவர் என்பதற்கு தகுதி இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தில் ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். ஊர் ஊரா போய் பெட்டி வாங்குகிறார். பெட்டி வாங்குவது அவர்களின் பழக்கம். மேயராக இருந்த போதும், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது ஏன் மனு வாங்கவில்லை. பெட்டி உடைக்க முடியாது, சீல் உடைக்க முடியாது ஆட்சிக்கும் வரமுடியாது. அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தார்.

    தேனியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்த போது தேசிய வங்கிகளில் உள்ள நகைக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பெண்கள் கூச்சலிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட நகர், பேரூர் பகுதியில் பிரசாரம் செய்த அவர், பெண்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என கூறினார்.

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சன்னாநல்லூர், தூத்துக்குடி, நல்லமாங்குடி, நன்னிலம், மாப்பிள்ளைக்குப்பம், ஆனைக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ்க்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, தாராபுரம் நகர்ப்பகுதியில் வீடு வீடாகச் சென்று, தனக்கு ஆதரவு திரட்டினார். அப்போது, உழவர் சந்தை அருகே உள்ள ஒரு காய்கறி கடையில், காசு கொடுத்து ஒரு கிலோ தக்காளி வாங்கினார். அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் முத்துச்சாமியை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பரப்புரை செய்தார். அப்போது, அதிமு சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை கடுமையாக தாக்கி பேசினார். மேலும், தமிழக வளர்ச்சியை கருத்தில் கொண்டு அமமுகவுக்கு வாங்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், ‘தங்களை பயன்படுத்தத் தவறினால் மீண்டும் ஊழல் சாக்கடையில் மாட்டுவீர்கள் என்று தெரிவித்தார். புதுச்சேரி புஸ்ஸி மணிகூண்டு சந்திப்பில் மக்கள் மத்தியில் பேசிய அவர், கோவையில் தாம் போட்டியிட்டாலும் புதுச்சேரியும் தனது ஊர் என்றார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: