முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரிசி, தயிர், மோர், வெல்லம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீது வரி விதிக்க தமிழகம் எதிர்ப்பு.. நிதியமைச்சர் பிடிஆர் விளக்கம்

அரிசி, தயிர், மோர், வெல்லம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீது வரி விதிக்க தமிழகம் எதிர்ப்பு.. நிதியமைச்சர் பிடிஆர் விளக்கம்

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தவறான செய்திகளை சிலர் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதாகும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அரிசி, தயிர், மோர், வெல்லம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீது வரி விதிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரிசி உள்ளிட்ட, பேக்கிங், லேபில் (Label) செய்யப்பட்ட பல உணவுப் பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டது குறித்து பல்வேறு தவறான செய்திகள் உலவி வருகின்றன. ஆதலால் இந்நிகழ்வு குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது அவசியமாகும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 45 வது கூட்டத்தில் முடிவு செய்தவாறு, பின்வரும் இனங்களை பரிசீலித்து, பரிந்துரைகளை அளித்திட அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

1. வரிவிகிதங்களை எளிமைப்படுத்தி வரி கட்டமைப்பினை சீரமைத்தல்.

2. தற்போதைய வரிவிகிதங்களை மறுஆய்வு செய்து வரி வருவாயினைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்தல்.

இக்குழுவில் கர்நாடகா மாநில முதல்வர் ஒருங்கிணைப்பாளராகவும், பிகார், கோவா, கேரளம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநில அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இக்குழுவில் தமிழ்நாடு உறுப்பினராக இடம் பெறவில்லை.

இக்குழு தனது பரிந்துரைகளை அளித்த பின்னர், அப்பரிந்துரைகள் மீதான மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்டன. அரிசி, தயிர், மோர் மற்றும் வெல்லம் உள்ளிட்ட உணவு பொருட்களின் மீதான வரி சாமானிய மக்களை பாதிக்கும் என்பதால் இவை மீதான வரிவிதிப்பு குறித்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள இயலாது என தமிழ்நாடு அரசால் 20.06.2022 நாளிட்ட கடித எண் 12680, 2021ல் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அளவில் நடைபெற்ற கூட்டங்களிலும் (Fitment Committee) தமிழ்நாடு அரசின் பிரதிநிதியால் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது.

2022 ஜூன் 28 மற்றும் 29 ஆம் நாட்களில் சண்டிகரில் நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்தின் 47வது கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட அமைச்சர்களின் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட 56 பரிந்துரைகள் கொண்ட இடைக்கால அறிக்கை மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்ற முடிவு சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது. விவாதத்திற்கு பின், அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரி விதிப்பு குறித்து மூன்று கட்டங்களில் இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதை மத்திய நிதி அமைச்சரே குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உண்மைநிலை இவ்வாறு இருக்க அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தவறான செய்திகளை சிலர் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாடு தனது எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும், மாநில மற்றும் மத்திய அரசுகளின் கருத்தொற்றுமை முடிவின்படி விதிக்கப்பட்டுள்ள வரியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்த உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: GST, Minister Palanivel Thiagarajan