திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் டெல்லியில் நேற்று மாலை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை அவரது அலுவலகத்தில் சந்தித்து, நியூட்ரினோ திட்டத்தை கைவிட கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க, மத்திய அமைச்சர் பியூஷ்கோயலை சந்தித்து சில திட்டங்கள் குறித்து பேசினோம். குறிப்பாக நாட்டில் அமைக்கப்பட உள்ள 7 புதிய ஜவுளி பூங்காக்களில் 2 ஜவுளி பூங்காக்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என கேட்டோம்.
நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள எதிர்ப்புகளை எடுத்துரைத்தோம். சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, போராட்டங்கள் நடந்து வருகின்றன என்பதையும், நீதி மன்றத்தில் வழக்குகள் இருப்பது குறித்தும் கூறினோம்.
தமிழகத்தில் பாதுகாப்பு வழித்தடத்தை அமைப்பதற்காக தொழில் மையங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்ததாக டி.ஆர்.பாலு தெரிவித்தார். இதேபோல, திருச்சியில் விலங்கியல் பூங்கா அமைப்பதற்கு நிதி வழங்க வேண்டும், மனிதர்கள் மற்றும் விலங்களுக்கு இடையேயான மோதலைத் தடுப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய வனத்துறை அமைச்சரிடம் தமிழக வனத்துறை அமைச்சர் முன்வைத்ததாகவும் டி.ஆர்.பாலு கூறினார்
மேலும், தமிழகத்திற்கு வாரம் 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் வலியுறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார். அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து வலியுறுத்தி இருந்தோம். அவரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார், எனவே, நிச்சயமாக வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று கூறினார்.
இந்நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் தடம் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் மேம்பாடுகள் குறித்து விரிவாக 2 தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டன.
Must Read : தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அப்போது, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் பங்கஜ் குமார் பன்சல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Neutrino Project, Piyush Goyal