பொய்யான பாலியல் வன்கொடுமை புகாரால் இளைஞருக்கு சிறை: வாழ்கையை சீரழித்ததாக ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க பெண்ணுக்கு உத்தரவு
பொய்யான பாலியல் வன்கொடுமை புகாரால் இளைஞருக்கு சிறை: வாழ்கையை சீரழித்ததாக ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க பெண்ணுக்கு உத்தரவு
மாதிரிப் படம்
இளைஞர் மீது பொய்யாக பாலியல் வன்கொடுமை புகார் அளித்து சிறையில் தள்ளியதற்காக, இளைஞருக்கு 15 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று பெண்ணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவெடுத்திருந்த நிலையில், நிலப்பிரச்சனை காரணமாக இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக, தாங்கள் வசித்து வந்த பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு சந்தோஷின் குடும்பம் இடம்பெயர்ந்தனர். பின்னர், தனியார் பொறியியல் கல்லூரியில் சந்தோஷ் பி.டெக் படித்து கொண்டிருக்கும் போது, தன்னுடைய மகளை சந்தோஷ் பாலியல் வண்கொடுமை செய்து விட்டதாக கூறி ஏற்கனவே திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருந்த பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தோஷ் கைது செய்யப்பட்டார். பின்னர், 95 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தோஷ்'க்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதனிடையே சந்தோஷ்'க்கு எதிராக புகார் அளித்த பெண்ணுக்கும் குழந்தை பிறந்தது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், புகார் அளித்த பெண்ணை சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என டி.என்.ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தோஷ் விடுதலை செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, தன் மீது பொய் புகார் அளித்து சிறையிலடைத்த பெண்ணிடம் 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சந்தோஷ் சென்னை கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பொய் புகாரில் தான் சிறை சென்றதால், தன்னுடைய படிப்பை தான் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தன்னுடைய வழக்கு செலவாக இதுவரை சுமார் 2 லட்சம் வரை வழக்கறிஞருக்கு செலவழித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தன் மீது போடப்பட்ட பொய் வழக்கால் தனக்கு ஓட்டுனர் உரிமம் கூட மறுக்கப்பட்டதாகவும், பொறியாளராக பணியாற்ற வேண்டிய தான் தற்போது அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சந்தோஷ் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்து அவருடைய எதிர்காலத்தை பாழாக்கியதால், அவருக்கு 15 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பொய் புகார் அளித்த பெண்ணுக்கு உத்தரவிட்டார்.
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.