Home /News /tamil-nadu /

ஊரடங்கு அறிவிப்பு... பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடக்குமா?

ஊரடங்கு அறிவிப்பு... பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடக்குமா?

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Tamil Nadu lockdown | Jallikkattu | பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்பது குறித்து அரசின் அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடவில்லை. அதனால், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவருகிறது. ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. வரும் 14,15,16-ம் தேதிகளில் பொங்கல் பண்டிகைகள் இருப்பதால் அதன்பிறகு தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று ஒரே நாளில் சுமார் 2,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    அதன் காரணமாக தமிழ்நாடு அவசரமாக ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்ஒரு பகுதியாக வார இறுதி முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. பொதுப்போக்குவரத்து இயங்காது



     எனவே, மதுரையில் பொங்கலை ஒட்டி மூன்று தினங்களுக்கு நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கும். அன்று ஊரடங்கு இருக்கும்போது ஜல்லிக்கட்டு நடக்க வாய்ப்பில்லை. அதற்காக பாரம்பரியமாக 14-ம் தேதி அவனியாபுரம், 15-ம் தேதி பாலமேடு, 16-ம் தேதி அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மற்ற நாட்களில் தேதியை மாற்றி வைக்க வாய்ப்பில்லை.

    அதனால், தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி விவகாரத்தில் எந்த முடிவை அறிவிக்கப்போகிறது என்பது தெரியவில்லை. இதுவரையில் எந்த முடிவும் அறிவிக்காத நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இது ஜல்லிக்கட்டிற்கு பொருந்துமா என்பது குறித்து தெளிவாக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கவில்லை. கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ள நிலையில் போட்டிகள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus, Jallikattu, Lockdown, Omicron

    அடுத்த செய்தி