அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி

அமைச்சர் சிவி. சண்முகம்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 • Last Updated :
 • Share this:
  இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பாதிப்பின் அளவு இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இன்று கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா முதல் அலையில் பாதிக்கப்படாத பலரும் தொடர்ந்து இரண்டாவது அலையில் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், அமீர் கான், ஆலியா பட், ரன்வீர் கபூர் உள்ளிட்ட இந்தி திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் மிகக் குறைவாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது.

  இதனிடையே, கடந்த மாதம் தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், திமுக மகளிரணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்றைய தினம் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  இந்நிலையில், இன்று அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று காலை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளளார். இதில் கொரோனா தொற்று உறுதியானதால் திண்டிவனத்தில் இருந்து சென்னை தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் விரைந்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: