5 மாநில தேர்தலில் தமிழகத்தில் தான் அதிக தொகுதிகளில் பணப்பட்டுவாடா - தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிக பணம் மற்றும் இலவசங்கள் வழங்கியதன் காரணமாக நடைபெறவிருந்த ஆர்.கே,நகர் இடைத்தேர்தல் இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது.

  • Share this:
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் மொத்தம் 272 தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த 272 தொகுதிகளில் தமிழகத்தில் மட்டும் 118 தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பணப்பட்டுவாடா அதிகம் உள்ள தொகுதிகளில்,  அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிக்கக் கூறி பணம், மதுபானம், கூப்பன்கள் அல்லது பிற இலவசங்களை வாக்காளர்களுக்கு வழங்க வாய்ப்புள்ளது. இதனால் வெளிப்படையான சுதந்திரமான தேர்தல் முறை பாதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தலை ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் 47 தொகுதிகளும், அசாமில் 52 தொகுதிகளும் மற்றும் கேரளாவில் 25 தொகுதிகளிலும் தேர்தலுக்கு பணம் வழங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  மேலும் புதுச்சேரியின் 30 தொகுதிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தொகுதிகளைக் கண்காணிக்க கூடுதல் செலவினப் பார்வையாளர்கள்தேர்தல் ஆணையத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், தற்போது வரை தொகுதிக்கு ஒருவர் என 118 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதலாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் சட்டவிரோத பணப்பட்டுவாடாவில் தமிழகம் தனி இடம் பிடித்து வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு அதிக பணம் மற்றும் இலவசங்கள் வழங்கியதன் காரணமாக நடைபெறவிருந்த ஆர்.கே,நகர் இடைத்தேர்தல் இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது. இது தவிர, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலின் போதும் 112 கோடிக்கும் அதிக மதிப்புடைய இலவசப் பொருட்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது தமிழகத்தின் அனைத்து தொகுதிகளும் தீவிரமாகக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், வரும் சட்டமன்றத் தேர்தலின் 118 தொகுதிகளில் செலவினங்கள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள செலவினப் பார்வையாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வருமான வரித்துறை, காவல்துறை, கலால் துறை, வருவாய் இயக்குநரகம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

ஒவ்வொரு தொகுதியிலும், அனைத்து வேட்பாளர்களின் கணக்குகளையும், அரசியல் கட்சிகளின் செலவுகளை கண்காணிப்பது மட்டுமல்லாமல், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வெவ்வேறு குழுக்களின் செயல்பாட்டையும் ஆய்வு செய்து அறிக்கையை அவ்வப்போது தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவார்கள்.

இந்த செலவீனப் பார்வையாளர்கள் தவிர பொதுப்பார்வையாளர்களாக 150 ஐஏஎஸ் அதிகாரிகளும், போலீஸ் பார்வையாளர்கள் 40 பேரும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Published by:Vijay R
First published: