ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார். அவரின் உரையில், தமிழகத்தில் புதிய தொழில்கள் ஏராளமாக 20 மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை 207 தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன என்று கூறினார். அதன் மூலம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 209 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 3 இலட்சத்து 44 ஆயிரத்து 150 நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, மேற்கண்ட 207 தொழில் நிறுவனங்களில், இதுவரை 111 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, 13 ஆயிரத்து 726 கோடி ரூபாய் முதலீடு வரப்பெற்றுள்ளது. 15 ஆயிரத்து 529 நபர்களுக்கு வேலை கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அந்த வகையில் தொழில் அதிபர்களை - நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்குத் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது என்று பெருமிதமாய் கூறியுள்ளார். அண்மையில் "ஸ்டார்ட் அப் இந்தியா" வெளியிட்டிருக்கக்கூடிய தரவரிசைப்பட்டியலிலும் பல படிகள் முன்னேறி அரசின் சிறந்த புத்தொழில் செயல்பாடுகளுக்காக "லீடர்" என்கிற அங்கீகாரத்தினை தமிழ்நாடு பெற்றுள்ளது என்பதை முதல்வர் உரையில் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய முதல்வர், கடந்த 2021-2022 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குத் தேவையான துணிகர முதலீடுகளைத் திரட்டுவதில் தமிழ்நாடு, பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக நான்காம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது என்பதைத் தெரிவித்துள்ளார். தொழில் வளர்ச்சி என்பது மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் முகமாகவும் முகவரியாகவும் இருக்கிறது என்பதை முதல்வர் இன்று சட்டமன்ற உரையில் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, CM MK Stalin, Entrepreneurship, TN Assembly