சிறப்பு டி.ஜி.பி மீதான பாலியல் புகாரை நேர்மையாக விரைவாக விசாரிக்கவேண்டும் - ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்

சிறப்பு டி.ஜி.பி மீதான பாலியல் புகாரை நேர்மையாக விரைவாக விசாரிக்கவேண்டும் - ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்

டி.ஜி.பி ராஜேஷ் தாஸ்

சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரணைக் குழு நேர்மையாக விசாரிக்கவேண்டும் என்று தமிழ்நாடு ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

  • Share this:
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறை சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் முதல்வருடன் சென்றார்.

    பாதுகாப்பு பணிகள் முடிந்து சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்காக கிளம்பிய போது அந்தந்த மாவட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவரை வரவேற்று உபசரித்து அனுப்பினர்.
    இந்த நிலையில் மற்றொரு மாவட்டத்தின் வழியாக வந்தபொழுது அந்த மாவட்டத்தின் எஸ்.பி ஆக இருக்கக் கூடிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸை வரவேற்று உபசரித்தார்.

    அப்போது பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை தனது காரில் ஏற்றிய சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த பெண் அதிகாரி உடனே காரை விட்டு இறங்கி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி டி.ஜி.பி திரிபாதி மற்றும் உள்துறை செயலாளரிடம் புகார் அளித்தார்.

    பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து புகாருக்கு உள்ளான சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் விவகாரம் வெளியே தெரியவர, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று மதியம் அறிக்கை வெளியிட்டார்.

    இந்த விவகாரமானது காவல்துறை மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் பெறும் சர்ச்சையாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிப்பதற்காக கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநாதன் ஐ.ஏ.எஸ் தலைமையிலான ஆறு பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு நேற்று மாலை உருவாக்கியது. அதனையடுத்து, ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், ‘உயர் அதிகாரியின் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் தொந்தரவு புகார் கொடுத்திருப்பதை அதீத கவலையும் நாங்கள் கவனித்துள்ளோம். பணியிடங்களில் நடைபெறும் பாலியல் தொந்தரவுக்கு எதிராக இந்தச் சங்கம் எப்போதும் இருக்கும். பாலியல் புகாருக்கு உள்ளான உயர் அதிகாரியை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. விசாரணைக் குழு வெளிப்படையான, நேர்மையான விரைவான விசாரணை நடத்தி நீதியை நிலை நாட்டவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: