HOME»NEWS»TAMIL-NADU»tamil nadu health secretary radha krishnan explains about corona vaccine skd

தமிழகத்தில் இரண்டரை கோடி தடுப்பூசி டோசேஜ்களை சேமிக்கும் நிலை உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் சுமார் இரண்டரை கோடி தடுப்பூசி டோசேஜ்களை சேமிக்குமளவிற்கு வசதி உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இரண்டரை கோடி தடுப்பூசி டோசேஜ்களை சேமிக்கும் நிலை உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்
  • Share this:

சென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு கர்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களுடன் புத்தாண்டு கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கர்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைப் பேறு பெற்ற தாய்மார்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகளுடன் கேக் வெட்டி புத்தாண்டின் மகிழ்ச்சியை கொண்டாடி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் கைகளில் மெழுகுவத்தி ஏந்தி துவங்கியுள்ள இந்த ஆண்டு நோய்நொடி இல்லா பாதுகாப்பான ஆண்டாக அமைய பிரார்த்தனை மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறைச் செயலர், இந்த ஆண்டு அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான ஆண்டாக அமைய சுகாதாரத்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும், நாளை சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெறவுள்ளதாகவும், சென்னை, நெல்லை, நீலகிரி, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் 11 மையங்களில் இந்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக சுகாதாரத்துறை கொரோனாவிற்கு எதிராக கடுமையாக போராடி வருவதாகவும், படிப்படியாக கொரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதாகவும் கூறிய அவர், வரும் நாட்களில் கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபடவேண்டும் என்றார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புத்தாண்டை முன்னிட்டு முதலமைச்சர் உத்தரவின் பேரில் நேற்றிரவு சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியும் நடவடிக்கையை பல்வேறு இடங்களில் துவக்கி வைத்ததாகவும், அதேபோல இன்று எழும்பூர் மருத்துவமனையிலும் குழந்தை பெற்றெடுத்த 74 தாய்மார்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் கூறினார்.

மேலும், அனைவரும் புத்தாண்டை கொண்டாடும்போது மகப்பேறு காலங்களில் தாய்மார்களுக்கு உதவியாக இங்கு போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தனது பாராட்டுகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், தடுப்பூசி விரைவில் வரவுள்ள நிலையில் முதலமைச்சர் உத்தரவின்படி அந்த நடவடிக்கைகளில் தனி கவனம் செலுத்தி சுகாதாரத்துறை செயல்பட்டு வருவதாகவும், தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், லண்டனில் இருந்து வந்த 1,877 பேரின் மாதிரிகளை பரிசோதித்ததில் இதுவரை ஒரே ஒருவருக்கு மட்டுமே நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் இருந்த 1,872 பேரில் 44 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தாலும், மரபணு பரிசோதனையில் ஒருவருக்கு மட்டுமே உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்று உள்ளது எனவும் மற்றொருவருக்கு இல்லை எனவும் முடிவுகள் வந்துள்ளது.

மேலும், மீதமுள்ளவர்களின் முடிவுகள் ஆய்வில் உள்ளது எனவும் அவர்களும் உடலளவில் நல்ல முன்னேற்றத்துடன் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறிய அவர், பொதுமக்கள் பதற்றத்தை தவிர்த்து சுய பாதுகாப்புடன் இருக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், அனைத்தையும் தயார் நிலையில் வைக்கும் பொருட்டு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் 51 நடமாடும் குளிர்விப்பான்களை (Coolers)மாவட்ட அளவில் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும், துணை மாவட்ட அளவில் தடுப்பூசியைப் பகிர்ந்து அளிக்கும் பொருட்டு இரண்டாம்நிலை சேமிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் நாளைய ஒத்திகையைப் பொறுத்தவரை சென்னை, நெல்லை, நீலகிரி மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் 11 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தடுப்பூசி வந்தால் செய்யவேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன உள்ளிட்ட தட்டமிடல் மற்றும் தயாரிப்பு மட்டுமே நாளை நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும், தடுப்பூசி வரும் பட்சத்தில் முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், முதல் நிலை பணியாளர்கள், வயது முதிர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் எந்த ஒரு பின்னடைவும் ஏற்படாத வகையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் சுமார் இரண்டரை கோடி தடுப்பூசி டோசேஜ்களை சேமிக்குமளவிற்கு நிலை உள்ளதாகவும் மகாராஷ்டிரம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே மருத்துவப் பணியாளர்களும், முதியவர்களும் அதிக அளவில் உள்ளதால் நமக்கு முன்னுரிமையும், தடுப்பூசி எண்ணிக்கையும் மத்திய அரசிடம் இருந்து அதிகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.

மேலும், சிரிஞ்சுகளை மத்திய அரசே வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்திடமும் தேவையான அளவு சிரிஞ்சு இருப்பு உள்ளதால் அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை எனவும் கூதிய அவர், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பாமல் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: