ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #தமிழ்நாடு - காரணம் என்ன?

ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #தமிழ்நாடு - காரணம் என்ன?

ட்விட்டர்

ட்விட்டர்

தமிழ்நாடு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு ஹேஸ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ட்விட்டரில் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக முக்கிய காரணமாக அமைந்திருப்பது ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு தான். ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து தற்போது ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது. ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் எனப் பேசினார். ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆளுநரின் கருத்து சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் இதற்கு எதிராக தங்களது கருத்துகளை பதிவிட்டனர். தமிழகம் என்பதை விட தமிழ்நாடு என்று சொல்வது சரியான ஒன்று, அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று பலரும் தங்களது கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்துவிட்டு வந்தனர்.

தமிழ்நாடு வெறும் பெயரல்ல. புவியியல்- மொழியியல்- அரசியல்- பண்பாட்டின் தனித்துவ அடையாளம். பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டினார், கழகம் தந்த அண்ணா. அவர் வழியிலும், முத்தமிழறிஞர் வழியிலும் தமிழ்நாட்டினை தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழகம் அரணாக காத்து நிற்கும்! என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

நம் மொழி - பண்பாடு - அரசியல்- வாழ்வியலின் அடையாளம் "தமிழ்நாடு". அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான் என்று கனிமொழி எம்.பி ட்வீட் செய்துள்ளார்.

அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி நெட்டிசன்கள் பலரும் ட்விட்டரில் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேகில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்திய அளவில் #தமிழ்நாடு தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேலான ட்வீட்கள் இந்த ஹேஸ்டேகில் இதுவரை பதிவிடப்படுள்ளது.

First published:

Tags: Tamil Nadu, Trending, Twitter