மலைபகுதிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட மனைகளை வரைமுறைப்படுத்த புதிய விதிகளை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
மலைபகுதிகளில் வீட்டு மனைகளை வாங்கியவர்கள் பெரும்பாலும் ஏழைகளாகவும் அப்பாவிகளாகவும் இருப்பதால் இந்த வரைமுறை அவசியம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைபடுத்துவது தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டது.
தமிழ்நாடு நகரமைப்புத் திட்டமிடல் சட்டம் 1971-ன் கீழ், தமிழ்நாடு அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் ஒழுங்குமுறை விதிமுறை -2017 என்கிற அந்த விதிமுறைகளின்படி, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை உருவாக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்களும், நிலத்தின் உரிமையாளர்களும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதி, மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், டவுன் பஞ்சாயத்து, செயல் அதிகாரி, கிராம பஞ்சாயத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோரிடம் விண்ணப்பம் செய்து அங்கீகாரமற்ற நிலங்களை வரையறை செய்து கொள்ளலாம்.
இப்படி வரையறை செய்யத் தகுதியான நிலங்கள் அனைத்தும் 2016 ம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகளாக இருக்க வேண்டும். இந்த நிலங்களை வரையறை செய்வதற்காக உரிய கட்டணத்தை நில உரிமையாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மேற்கொண்ட ஆய்வில் மிக அதிக அளவிலான மனைகள் தமிழ்நாடு மலைகள் பாதுகாப்பு ஆணைய சட்ட வரையறைக்கு இருக்கும் மலை மற்றும் மலையை ஒட்டிய பகுதிகளில் உருவாக்கப்பட்டடுள்ளது.
இவை அங்கீகாரமற்ற மனைகள் என்பதால் அப்பகுதிகளுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் சிக்கல் இருந்து வருகிறது. அதனால் இம்மனைகளை வரைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு மலை பகுதிகள் அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் ஒழுங்குமுறை விதிமுறை 2020 என்ற விதிகளை உருவாக்கியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இந்த புதிய விதிமுறைகளின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள மலை பகுதிகளில் யானை வழித்தடங்களாக அறிவிக்கப்பட்ட இடங்கள், சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்கள், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்ட இடங்கள் நீங்கலாக பிற இடங்களில் 2016 ம் ஆண்டு அக்டோபர் 20-ந்தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட, விற்கப்பட்ட மனைகளை உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை அணுகி வரைமுறை செய்து கொள்ளலாம்.
விதிமுறைகளின்படி அரசு புறம்போக்கு, நீர்நிலை, கால்வாய், ஏரி, ஆறு ஆகியவற்றில் அமைக்கப்பட்ட நிலங்கள், உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு இடையில் இருக்கும் மற்றும், காப்புக்காட்டிலிருந்து 500மீ தூரத்திற்குள் இருக்கும் மனைகளை வரைமுறைப்படுத்த முடியாது. மேலும் மனைகளை வரைமுறைப்படுத்த வேளாண்துறை செயற்பொறியாளர், புவியியல் துறை துணை இயக்குனர், வருவாய் கோட்ட அதிகாரி ஆகியோரிடமும், 5 ஏக்கருக்கு உட்பட்ட மனையென்றால் மாவட்ட வன அதிகாரியிடமும் அதற்கு மேற்பட்ட மனையென்றால் முதன்மை தலைமை வன பாதுகாவலரிடமும் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்று புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மலை மற்றும் மலையையொட்டிய பகுதிகளில் பல ஆண்டுகளாக நடந்துவரும் செங்கல் சூளைகள், விடுதிகள், வீட்டு மனைகள் போன்ற ஆக்கிரமிப்புகளால் சமீபத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்கு மனித மோதல் சம்பங்கள் அதிகரித்துள்ள நிலையில் இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் புதிய விதிமுறைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
Also see...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu govt