கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில், அரசியல் கூட்டம் நடத்தினால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில், அரசியல் கூட்டம் நடத்தினால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

தமிழக அரசு

சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களைத் தவிர, கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ கூட்டங்களைக் கூட்டினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 • Share this:
  திமுக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில், முதற்கட்டமாக கிராமங்களில் கிராமசபை கூட்டம் நடத்தி, அதிமுக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, மு.க.ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் கிராமங்களில் மக்களை கூட்டி அரசுக்கு எதிராக தீர்மானம் இயற்றியுள்ளனர்.

  இந்நிலையில், தமிழக அரசு அரசியல் கட்சிகள் கிராம சபை கூட்டங்களை நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி, எச்சரிக்கை விடுத்துள்ளது.

  தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

  ‘தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் 18 வயது நிரம்பிய வாக்களிக்கும் உரிமை கொண்ட மக்களை உள்ளடக்கி கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது. கிராம சபை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி அமைக்கப்படும் ஒரு நிர்வாக அமைப்பாகும். இக்கிராம சபைகள் அவ் ஊராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவை. கிராம சபைகள் செயல்படும் முறைகள் குறித்த விரிவான விதிமுறைகள் அரசால் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

  ஆண்டுதோறும் குறைந்த பட்சம் நான்கு முறை அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் நடத்த அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தில் மிக முக்கிய பங்காற்றும் கிராம சபைகள் ஊரக பகுதி மக்களின் குறைகளை களைந்து கிராமம் முன்னேற்றம் காண வழிவகுக்கிறது. இத்தகைய கிராம சபைகள் அரசியல் சார்பற்றவை.

  இந்நிலையில் சில அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் மக்களை குழப்புவதற்காக அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களை நடத்திவருகின்றனர். இது சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணானது மட்டும் அல்லாமல் அந்த அமைப்பை இந்நடவடிக்கை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

  கிராம சபை என்பது அரசமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பாகும். மேற்படி ஊராட்சி சட்டத்தின்படி கிராம சபையினை கூட்டும் அதிகாரம் ஊராட்சித் தலைவருக்கு மட்டுமே உள்ளது. அவர், கிராம சபையினை கூட்டத் தவறும் பட்சத்தில் ஊராட்சிகளின் ஆய்வாளர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் கிராம சபைக் கூட்டத்தை கூட்ட வேண்டும். எனவே, மேற்படி சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களைத் தவிர, கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ கூட்டங்களைக் கூட்டுவது சட்டத்துக்கு எதிரானது.

  இந்தச் சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளன. கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு அரசால் அனுமதிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்ற அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  திமுக நடத்திய கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: