TAMIL NADU GOVERNMENT ORDERED ONLINE CLASS FOR COLLEGE UNIVERSITY STUDENTS SKD
கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் - தமிழக அரசு உத்தரவு
கோப்பு படம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய் பரவல் தற்போது தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக உயர்கல்வித்துறை ஆலோசித்து அதன் அடிப்படையில் நாளை முதல் அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையை தொடர்ந்து கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதுகலை இரண்டாமாண்டு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் மற்ற ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாக துவக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.
அதனை தொடர்ந்து நேரடியாக மாணவர்களுக்கு வகுப்புகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரானா பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில் ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இம்மாதம் 31ம் தேதிக்குள் செய்முறை வகுப்புகள் மற்றும் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்கவும் தமிழக அரசு உத்தரவில் தெரிவித்துள்ளது.