Home /News /tamil-nadu /

குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது - தமிழக அரசு உத்தரவு

குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது - தமிழக அரசு உத்தரவு

கிராம சபைக் கூட்டம்

கிராம சபைக் கூட்டம்

கொரோனா பாதிப்பின் காரணமாக குடியரசு தின நாளன்று கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் 18 வயது நிரம்பிய வாக்களிக்கும் உரிமை கொண்ட மக்களை உள்ளடக்கி கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது. கிராம சபை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி அமைக்கப்படும் ஒரு நிர்வாக அமைப்பாகும். இக்கிராம சபைகள் அவ் ஊராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவை. கிராம சபைகள் செயல்படும் முறைகள் குறித்த விரிவான விதிமுறைகள் அரசால் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் குறைந்த பட்சம் நான்கு முறை அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் நடத்த அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தில் மிக முக்கிய பங்காற்றும் கிராம சபைகள் ஊரக பகுதி மக்களின் குறைகளை களைந்து கிராமம் முன்னேற்றம் காண வழிவகுக்கிறது. இத்தகைய கிராம சபைகள் அரசியல் சார்பற்றவையாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதனையடுத்து கிராம சபைக் கூட்டம் தமிழக மக்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தநிலையில், வரும் குடியரசு தினத்தன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், ‘கிராம சபைக் கூட்டம் நடைபெறாமல் இருப்பதற்கு கிராம பஞ்சாயத்துகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை அனுப்பி உறுதி செய்யவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Republic day

    அடுத்த செய்தி