• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • The family man-2: பேமிலி மேன் தொடரை தடை செய்யவேண்டும் - மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் கடிதம்

The family man-2: பேமிலி மேன் தொடரை தடை செய்யவேண்டும் - மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் கடிதம்

தி ஃபேமிலி மேன் 2

தி ஃபேமிலி மேன் 2

அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ள டி ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

  • Share this:
    அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியான தொடர் தி பேமிலி மேன் வெப் சீரிஸ். 2019-ல் வெளியான இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். The Family Man தொடர் என்பது தேசியப் புலனாய்வு முகமையில் அச்சுறுத்தல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு அணியில் பணியாற்றும் அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரியின் சாகசங்களைச் சொல்லும் கதை.

    முதல் சீஸனில் ஐஎஸ்ஐஎஎஸ் குழுவால் தூண்டப்பட்ட இஸ்லாமியவாத தீவிரவாத தாக்குதல்களை ஸ்ரீகாந்த் திவாரியின் அணி முறியடிப்பதாகக் காட்டப்படும். மற்றொரு பக்கம், ஸ்ரீகாந்தின் குடும்ப வாழ்க்கை மோசமடைந்து கொண்டே போவது குறித்த காட்சிகளும் இடம்பெற்றன. ஸ்ரீகாந்தாக மனோஜ் பாஜ்பாயும் அவரது மனைவி சுசித்ராவாக பிரியாமணியும் நடித்திருந்தனர். இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் சண்டைகள், டெல்லியில் தீவிரவாதிகள் விஷ வாயு தாக்குதல் நடத்தப்படுவது போல காட்சிகள் இருக்கும். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தது.

    அமேசான் ப்ரைமில் வெளியான இந்த தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்த சீஸன் எப்போது என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இரண்டாவது சீஸன் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சீஸனுக்கான ட்ரெய்லர் மே 20-ம் தேதி வெளியானது. இந்த இரண்டாவது சீசனின் கதைக் களம் சென்னையில் நடைபெறுவதுபோல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விடுதலைப் புலிகளை தீவிரவாத இயக்கமாக சித்தரித்து அவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவது சித்தரிக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தொடரில் சமந்தா விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக நடித்துள்ளார். அதனையடுத்து, தி பேமிலி மேன் -2 தொடருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சீமான், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த தொடரை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்தநிலையில், தமிழக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘ஈழத் தமிழர்களை தவறாகவும் மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய ‘தி பேமிலி மேன்-2’ என்ற கண்டனத்துக்குரிய இந்தித் தொடர் குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள மேற்கூறிய தொடரின் முன்னோட்டமானது இலங்கையில் ஈழத்தமிழர்களின் வரலாற்று சிறப்புவாய்ந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது.

    நெடிய ஜனநாயகப் போராட்டக்களத்தில் அவர்களது தியாகங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அது எந்த வகையிலும் தமிழ்ப் பண்பாட்டின் மதிப்புகளைக் கொண்டதாக இல்லை. பெருமைமிகு தமிழ்ப் பண்பாட்டை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளைக் கொண்ட தொடரை எந்த வகையிலும் ஒளிபரப்புக்கு ஏற்ற மதிப்புகளைக் கொண்டது என கருத முடியாது. எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பேசும் நடிகையான சமந்தா தீவிரவாதியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடித் தாக்குதல் என்பதோடு, இதுபோன்ற உள்நோக்கமும் விஷமத்தனமுமான பரப்புரையை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. இந்தத் தொடரின் முன்னோட்டம் ஏற்கெனவே தமிழகத்தில் வாழும் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்துக்காக பல ஆண்டுகளாக நமது உடன்பிறப்புகளான ஈழத் தமிழர்கள் போராடி வருகையில் அமேசான் ப்ரைம் போன்ற நிறுவனம் இதுபோன்றதொரு பரப்புரையை மேற்கொள்வது அவசியமற்றதாகும்.

    மேற்கூறிய தொடரானது, ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது தமிழகத் தமிழர்களின் உணர்வுகளையும் பெருமளவில் புண்படுத்தியுள்ளது. இத்தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தைப் பேணுவது கடினமாகும். இந்தச் சூழ்நிலையில், அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பப்படவுள்ள இந்தத் தொடரை, தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: