Vaccination : தமிழகத்தில் வீடில்லா மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை - தமிழக அரசு விளக்கம்

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் வீடில்லா மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனா தொற்று பாதிக்கும் அபாயம் அதிகமுள்ள வீடில்லா மக்களுக்கும் மற்றும் அரசு அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் வாதிட்ட தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வீடில்லாத மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார்.

    இதை பதிவு செய்த நீதிபதிகள், ஏற்கெனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி அமர்வுக்கு, இந்த வழக்கையும் மாற்றி பரிந்துரைப்பதாக தெரிவித்தனர்.

    தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் லாரி ஓட்டுநர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என 18 வயது முதல் 44 வயது வரையானோருக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. லாரி உரிமையாளர் சங்கத்தில் நடைபெற்ற இந்த முகாமில், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட சுமார் 500 பேர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த தடுப்பூசி முகாம், இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல, தர்மபுரி மாவட்டம் அரூரில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். ஒரே நாளில் 350 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஆர்வத்தில், வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், மாநில அரசுகளிடம் இன்னும் 1.77 கோடி தடுப்பூசி டோஸ்கள் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் மேலும் 1 லட்சம் டோஸ்கள் கிடைக்கும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசியை, உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, மாநிலங்கள் பெறப்படும் தடுப்பூசி மற்றும் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகள் மற்றும் மாநிலங்கள் கொள்முதல் செய்தவையாக மொத்தம் 22 கோடியே 59 ஆயிரத்து 880 டோஸ் தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதுவரை பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.

    Must Read : திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; குழந்தைகள் மீட்பு!

     

    இதில் வீணானவை உள்பட மொத்தம் 20,13,74,636 டோஸ்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 1,77,52,594 டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ளது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இது தவிர, அடுத்த சில நாட்களில் மேலும் 1 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கிடைக்கும் எனவும் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published: