முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்களின் பயனை அடைவதற்காக அதன் பயனாளிகள் தங்களின் ஆதார் எண்ணை அந்த திட்டங்களில் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்தநிலையில் தமிழக அரசும் தனது பல்வேறு திட்டங்களில் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்கி வருகிறது. குறிப்பாக, உதவித்தொகை, ஓய்வூதியம், மின்சார இணைப்பு உள்ளிட்ட பல திட்ட பலனை பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்தி உள்ளது.
அதை மேலும் பல திட்டங்களில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளின் ஆதார் எண் இணைப்பையும் கட்டாயமாக்கி சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பெண் குழந்தை பாதுகாப்பு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறையின் அரசாணையில், அரசின் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தமிழக சமூக நலத்துறை சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, அந்த துறையின் சார்பில் பெண் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் தொகையை வைப்புத்தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் வைக்கப்படுகிறது. 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை செலுத்தப்படுகிறது. அந்த வைப்புத்தொகைக்கான ஆவணம் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது.
தற்போது மத்திய அரசு விதிகளின்படி, திட்டப்பயனாளிகளுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ்வரும் பயனாளிகள், ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை ஆதார் எண் பெறப்படாத நிலையில், ஆதார் எண்ணுக்காக பெற்றோர் மூலம் விண்ணப்பித்து, அதைக்கொண்டு திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்த போது வழங்கப்படும் ஆவணம் அல்லது ஆதார் எண்ணை பெறுவதற்கான விண்ணப்பத்தின் நகலை வைத்து இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம். அதோடு, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், பான் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், தாசில்தார் உள்ளிட்ட சான்றொப்ப அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Govt Scheme, MK Stalin, Tamil Nadu government