TAMIL NADU GOVERNMENT FARMERS HOSTILE ACTS WILL BE REMOVE SAYS STALIN SKD
தி.மு.க ஆட்சியில் தமிழக அரசின் விவசாய விரோத சட்டம் வாபஸ் பெறப்படும் - மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
தி.மு.க ஆட்சி அமைந்ததும் முதல் கூட்டத் தொடரிலேயே 3 வேளாண் சட்டங்கள்போல, தமிழக அரசின் விவசாய விரோத சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஒருங்கிணைந்த மேற்கு மண்டல விவசாய சங்கங்களின் மாநாடு நடைபெற்றது. அதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘விவசாயத்தை பற்றி பேசுவதற்கு விவசாயியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நெஞ்சில் ஈரம் இருந்தால் போதும். அந்த ஈரம் இந்த ஸ்டாலினிடத்தில் இருக்கிறது.
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை படித்தார்கள். நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், மத்திய பா.ஜ.க அரசின் 3 வேளாண் சட்டங்களைப் போல, தமிழக அரசு நிறைவேற்றி இருக்கும் விவசாய விரோத சட்டங்கள் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே திரும்பப் பெறப்படும் என்ற உறுதியை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். கழக அரசு அமைந்ததும் அது நிறைவேற்றப்படும்.
அதுமட்டுமின்றி மத்திய அரசிற்கு இதற்கு முன்பே அ.தி.மு.க அரசு தீர்மானம் போட்டு அனுப்பியிருக்கும் அந்தச் சட்டங்களையும் திரும்பப் பெறுவது தான் தி.மு.க ஆட்சியினுடைய வேலையாக இருக்கும். இலவச மின்சாரத்திற்கு பாதுகாப்பு சட்டம் கொடுக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இலவச மின்சாரம் கொடுத்த அரசுதான் தி.மு.க அரசு. அதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வரவேண்டிய அவசியமில்லை. நிச்சயம் தி.மு.க அதற்கு துணை நிற்கும்.
நெல் விலை, கரும்பு விலை ஆகிய இரண்டும் விவசாயிகளுடன் கலந்து பேசி உரிய விலையை நிச்சயமாக வழங்கப்படும். குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது என்பது பற்றி கழக அரசு அதில் உறுதியாக இருக்கும். கரும்பு விவசாயிகளை பாதிக்கும் அ.தி.மு.க அரசின் 2018ஆம் ஆண்டு சட்டம் நிச்சயம் வாபஸ் வாங்கப்படும் என்ற உறுதியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.