HOME»NEWS»TAMIL-NADU»tamil nadu government announced new year celebration banned because of new strain of corona spread video vai

New Year 2021 | புத்தாண்டு கேளிக்கைக்கு தடை: கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை வரவேற்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ள நிலையில், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பேக்கரி மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

  • Share this:



கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடற்கரைகளில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி மற்றும் ஜனவரி 1ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரைகளில் ஒன்றுகூட அனுமதியில்லை எனவும், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி விதவிதமான கேக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கோவையில் உள்ள பேக்கரியில் கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக கேக் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு வடிவங்களில் புதுவகை கேக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன.



எனினும் தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவால், வழக்கத்தை விட கேக் விற்பனை குறையும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புத்தாண்டை கொண்டாடுவதற்கு ஆண்டு தோறும் சென்னை, பெங்களூருவில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வரும் நிலையில், இந்தாண்டு விதிக்கப்பட்டிருக்கும் தடையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என டிராவல்ஸ் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரவலால் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளதாக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை இந்தாண்டு, அரசின் உத்தரவின்படியே ஹோட்டல்கள் செயல்படும் என்றும், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை வரவேற்பதாக, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அரசு விதித்துள்ள தடையால் அதிருப்தி அடைந்துள்ள சிலர், வீட்டுக்குள் முடங்க வேண்டியிருப்பதாக கூறினர்.

சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் அனைவரும் பயணிக்க அனுமதி (வீடியோ)

கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற நாட்களில்தான் குடும்பத்தினருடன் கடற்கரைகளுக்கு வர முடியும் என்றும், அதற்கு தடை விதிப்பது வேதனை அளிப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.






உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: