Home /News /tamil-nadu /

தமிழக அரசின் அம்பேத்கர், பெரியார் விருது- முன்னாள் நீதிபதி சந்துரு, எழுத்தாளர் திருநாவுக்கரசுவுக்கு அறிவிப்பு

தமிழக அரசின் அம்பேத்கர், பெரியார் விருது- முன்னாள் நீதிபதி சந்துரு, எழுத்தாளர் திருநாவுக்கரசுவுக்கு அறிவிப்பு

கே.சந்துரு, திருநாவுக்கரசு

கே.சந்துரு, திருநாவுக்கரசு

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அம்பேத்கர் விருது முன்னாள் நீதிபதி சந்துருவுக்கும், தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை வழங்கி கௌரவித்துவருகிறது. அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான திருநாவுக்கரசுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    அதேபோன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துருவுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    மேலும், இவ்விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தற்போது வழங்கப்பட்டுவரும் ஒரு லட்ச ரூபாய் என்பதை இந்த ஆடணு முதல் ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்திட முதல்வர் ஆணையிட்டுள்ளார். இவ்விருதுகள் விருதுத் தொகையுடன், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையுடன் வழங்கப்படும். வருகிற 15-ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்விருதுகளை வழங்குவார். சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு திராவிட இயக்கத்தின் நடமாடும் கலைக்கலைஞ்சியம் என தமிழ்ச் சமூகத்தால் போற்றப்படுபவர். திராவிட இயக்க வரலாலான நீதிக் கட்சி வரலாறு என்னும் நாவலை அது 1916-ல் தொடங்கப்பட்டது முதல் 1944-ல் திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் பெற்றது வரை இரண்டு தொகுதிகளாகப் படைத்துள்ளார். மேலும், திராவிட இயக்க வேர்கள், திராவிட இயக்கத் தூண்கள் போன்ற பல்வேறு வரலாற்று நூல்களையும் எழுதி தமிழ்ச்சான்றோர்களின் பாராட்டுகளைப் பெற்றவர். இவரது எழுத்துப் பணியைப் போற்றும் வகையில் 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் திரு.வி.க விருது அப்போதைய முதல்வர் கருணாநிதி கரங்களால் வழங்கப்பட்டது.

    டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெறத் தேர்வு செய்யப்படுள்ள சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தன்னுடைய பணிக் காலத்தில் 96,000 வழக்குகளுக்குத் தீர்வு கண்டு சாதனைப் படைத்தவர். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளை வழக்காடும் வழக்கறிஞராகப் பணியாற்றி, ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களின் குரலாய் உயர் நீதிமன்றத்தில் ஒலித்து மாபெரும் சாதனை படைத்தவர். இவர் அளித்த பல்வேறு தீர்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் காப்பதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சாதிய வேறுபாடுகள், ஒடுக்கப்பட்டோர், பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினர் உரிமை மறுப்பு ஆகியவற்றுக்கு எதிரான இவரது தீர்ப்புகளால் மக்களிடையை மிகுந்த நன்மதிப்பைப் பெற்றார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தவகையில், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சந்துருவிற்கு டாக்டர் அம்பேத்கர் விருதும், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவிற்கு சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான பரிசுத்தொகை ரூ.1 லட்சம் என்றிருந்த நிலையில், அது தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விருது பெற்றோருக்கு தங்கப்பதக்கம், விருதுக்கான பரிசுத்தொகை, தகுதியுரை ஆகியவற்றை ஜன.15ம் தேதியான திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    இவற்றில் ‘டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது’, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தரப்படுவதாகும். நீதியரசர் சந்துரு, தனது பணிக்காலத்தில் அளித்த பல்வேறு தீர்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் காப்பதாக அமைந்திருந்ததாகவும், தமிழகம் முழுவதும் பயணம் செய்து விளிம்பு நிலை மக்களுடன் வாழ்ந்து தமிழ்ச் சமூகம் மற்றும் பண்பாட்டின் பன்முகத்தன்மையை புரிந்துக்கொண்டு செயலாற்றினார் என அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி