Tamil Nadu Full Lockdown | முழு ஊரடங்கில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்

மாதிரிப் படம்

முழு ஊரடங்கில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • Share this:
    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. அண்மைக் காலங்களில் இந்திய அளவில் நாளொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டியும் பதிவாகி உள்ளது. குறிப்பாக, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, உத்திரப்பிரதேசம், டெல்லி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. தமிழ்நாட்டிலும் படிப்படியாக இந்த நோய்த்தொற்று, பிப்ரவரி மாதக் கடைசியில் நாளொன்றுக்கு 450 என்ற நிலை மாறி தற்பொழுது நாளொன்றுக்கு 26,000-க்கும் மேல் பதிவாகி வருகிறது. 23-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று உறுதியாகும் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது.

    தமிழ்நாட்டில் 07.05.2021-ஆம் நாள் கணக்கீடுபடி, தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.35 லட்சமாக உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (07.05.2021) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்தும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள் துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், 10.05.2021 காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் திறப்பு, பொதுப் போக்குவரத்து போன்றவற்றுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இருப்பினும், நண்பகல் 12 மணி வரை மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல, தமிழகம் முழுவதுமுள்ள அம்மா உணவகங்களும் வழக்கம் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: