• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாட்டில் நாளை ஊரக உள்ளாட்சித் தேர்தல்- எந்தெந்த பகுதிகளில் வாக்குப் பதிவு

தமிழ்நாட்டில் நாளை ஊரக உள்ளாட்சித் தேர்தல்- எந்தெந்த பகுதிகளில் வாக்குப் பதிவு

Youtube Video

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை எந்தெந்த ஊரக பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல், எத்தனை இடங்களுக்கு நடைபெற உள்ளது என்று பார்ப்போம். 

  • Share this:
    தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

    மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு திமுக, அதிமுகவினர் பெரும்பான்மையான இடங்களில் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர். இதேபோல் பாஜக, பாமக, காங்கிரஸ், தேமுதிக, அமமுக, விசிக, கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.

    இரண்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், 2,981 இடங்கள் போட்டியின்றி நிரப்பப்பட்டுள்ளதால், மீதமுள்ள 23,998 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

    இதில், 39 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு 78 மாவட்ட கவுன்சிலர்கள், 755 ஒன்றிய கவுன்சிலர்கள், 1,577 கிராம ஊராட்சித்தலைவர்கள், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர் உள்ளிட்ட 5 பகுதிகளிலும், திருப்பத்தூரில் சோலையார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி என 4 பகுதிகளிலும் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜாவிலும்,  வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கேவி குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியங்களும் தேர்தல் களமாக உள்ளன.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளூந்தூர்பேட்டையில் மக்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.

    காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத்திலும், செங்கல்பட்டில் இலத்தூர், திருப்போரூர் உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

    அதிகபட்சமாக விழுப்புரத்தில் செஞ்சி, கண்டமங்கலம், வானூர், விக்கிரவாண்டி உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்கள் தேர்தல் களமாக உள்ளன. முதல் கட்ட தேர்தலில் மட்டும் 41,93,996 வாக்காளர்கள், வாக்களிக்க இருக்கின்றனர்.

    இதற்காக 7,921 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் மாலை 5 முதல் 6 மணி என கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம்.

    இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 12ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: