Home /News /tamil-nadu /

நான் ஓராண்டுக்கு முன்பேவைத்த கோரிக்கை: ஜி.எஸ்.டி வரி விதிப்பில் முழு மாற்றங்கள் தேவை- அமைச்சர் பி.டி.ஆர்

நான் ஓராண்டுக்கு முன்பேவைத்த கோரிக்கை: ஜி.எஸ்.டி வரி விதிப்பில் முழு மாற்றங்கள் தேவை- அமைச்சர் பி.டி.ஆர்

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

ஜி.எஸ்.டியில் முழு மாற்றங்கள் தேவை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆண்டு மே 28-ம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் முக்கியமான கருத்துகளை முன்வைத்திருந்தார். அதனையொட்டி தற்போது ஜி.எஸ்.டி குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் அவருடைய பழைய பேச்சை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

    அதில், ’பொதுவுடைமைக் கொள்கையை உறுதியாக கடைபிடிக்கும் சீனாவில் தொடங்கி முதலாளித்துவ கொள்கையை வலியுறுத்தும் அமெரிக்கா வரை பெரும்பாலான நாடுகளில் மாநில, மாவட்ட அளவுகளில் ஏன் நகர அல்லது மாநகர அளவுகளில் நிதி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா அவ்விஷயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது.

    வரலாற்றுக் காரணங்களால் வரி விதிப்புக்கான அனைத்து அதிகாரங்களும் ஒன்றிய அரசிடம் குவிய, மறைமுக வரி விதிப்பு அதிகாரங்களை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பகிர்ந்து அளித்தது நம் அரசியலமைப்புச் சட்டம்.

    சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நமது அரசியலமைப்புச் சட்டம் ஒரு காலத்திலும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு அதிகாரக் குவிப்புக்கு சென்றுவிட்டது. அவசரகதியில் செயல்படுத்தப்பட்ட காரணத்தால் சரக்கு மற்றும் சேவை வரி வடிவமைப்பில் அடிப்படை குறைப்பாடுகள் உள்ளன. சட்டம் அமல்படுத்தப்பட்ட போது இந்த குறைபாடுகள் மேலும் வலுவடைந்து பெருமளவில் வெளிப்படத் தொடங்கியது.

    இந்தப் பிரச்னைகளில் முக்கியமானது, ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவின் நம்பிக்கையில் சீர்குலைவு ஏற்படுவதுதான். ஒன்றிய அரசு விதித்து, வசூலிக்கும் வரியில் மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய பங்கு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சீர்குலைவுக்கு மிகப்பெரிய அளவில் உறுதுணை புரிகிறது.

    சர்வ வல்லமை படைத்த, அனைத்து தளங்களையும் கூர்நோக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எதிர்நோக்காத ஒன்று ஜி.எஸ்.டி மன்றம். இம்மன்றத்திற்கு அதன் முக்கிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைப்பு ரீதியாகவும், தொழில்நுட்ப தள அடிப்படையிலும் போதுமான வசதிகள் இல்லை. இந்த மன்றம் வெறுமென ஓர் அடையாள சடங்காக முத்திரை குத்த மட்டுமே செயல்படும்போது தான் இந்த விந்தை அபாயகரமாக மாறுகிறது.


    மாநில அரசுகள் இல்லாமல் ஒன்றிய அரசு இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒருமைப்பாட்டிற்கு எந்த அளவுக்கு ஒன்றிய அரசு முக்கியமோ, அதே அளவுக்கு அது மற்றவர்களிடம் பெறுகிறது என்பதையும் உணர வேண்டும்.

    ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை: உச்ச நீதிமன்றம்

    முடிவாக நான் கூற விரும்புவது, ஜி.எஸ்.டி குறித்த பொது கருத்தை கிளை முதல் வேர் வரை மாற்றியமைக்கும் ஒரு முக்கிய புள்ளியை நாம் அடைந்துள்ளோம். தற்போது இப்பணியை நாம் மேற்கொள்ளத் தவறினால் நமது எதிர்காலமே கவலையளிக்கக் கூடிய கேள்விக்குறியாக மாறக்கூடும்’ என்று பேசியிருந்தார்.

    மேலும், ஜி.எஸ்.டி முறையில் முழு மாற்றங்கள் தேவை. இதுகுறித்து இன்று மாலையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: GST, Minister Palanivel Thiagarajan

    அடுத்த செய்தி