கெயில் எரிவாயு குழாய் பதிப்பு - தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

news18
Updated: June 13, 2018, 7:52 AM IST
கெயில் எரிவாயு குழாய் பதிப்பு - தமிழக விவசாயிகள் எதிர்ப்பு
கெய்ல்
news18
Updated: June 13, 2018, 7:52 AM IST
கெயில் நிறுவனம் எரிவாயு குழாயை நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு செல்வது சாத்தியமில்லை. அதனால் திட்டமிட்ட இடத்தில் வீடுகள் இருப்பின் அந்த இடங்களில் மட்டும் வழித்தடம் மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறியிருப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குழாய் வழியாக எரிவாயுவை கொண்டு செல்ல கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான எரிவாயு குழாயை விளைநிலங்கள் வழியாக பதிக்க 2013ம் ஆண்டு பணி தொடங்கியபோது, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி என 7 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தியதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

தமிழக அரசிடம் அனுமதி கிடைத்ததும், 3 ஆண்டுகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி முடிக்கப்படும் என கெயில் நிறுவன தென்மண்டல பொது மேலாளர் முருகேசன் தற்போது தெரிவித்துள்ளார். மேலும், நெடுஞ்சாலை ஓரத்தில் கொண்டுசெல்ல வாய்ப்பில்லை எனவும், முன்னதாக திட்டமிட்ட இடத்தில் தற்போது வீடுகள் இருப்பின் அவை மட்டும் மாற்றி அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தந்த பகுதிகளில் விவசாயிகள் குழு அமைத்து இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும், விவசாயிகளின் கருத்தை புறக்கணித்துவிட்டு, விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்வது என்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் குழாய் பதிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என கெயில் நிறுவனம் தெரிவித்தாலும், எரிவாயு குழாய் பதிக்கும் இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கவோ, வீடு கட்டவோ முடியாது என பெங்களூரை அடுத்துள்ள தும்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி யோகாநந்த் தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன் தன் நிலத்தில் எரிவாயு குழாய் பாதிக்கப்பட்டதாகவும், விபத்து குறித்த பயம் இல்லை என்றாலும், சில குறிப்பிட்ட பயிர்களை மட்டுமே அந்த இடத்தில் சாகுபடி செய்ய முடிகிறது என்றார்.

கெய்ல் எரிவாயு குழாய் தமிழகத்தில் கோவையில், 14 கிராமங்கள் வழியாக 44 கிலோ மீட்டர் தூரமும், திருப்பூரில் 21 கிராமங்கள் வழியாக 39 கிலோ மீட்டர் தூரத்துக்கும், ஈரோட்டில், 16 கிராமங்கள் வழியாக 38 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பதிக்கப்படும். நாமக்கலில் 9 கிராமங்கள் வழியாக 17 கிலோ மீட்டர் தூரத்துக்கும், சேலத்தில் 28 கிராமங்கள் வழியாக 66 கிலோ மீட்டர் தூரத்துக்கும், தர்மபுரியில் 28 கிராமங்கள் வழியாக 63 கிலோ மீட்டர் தூரத்துக்கும், கிருஷ்ணகிரியில் 19 கிராமங்கள் வழியாக 43 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என மொத்தம் 135 கிராமங்கள் வழியாக 310 கிலோ மீட்டர் தூரத்துக்கு அனுமதி பெற்ற பிறகு அமைக்கப்பட உள்ளது.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...