தமிழகத்தில் கடந்த தேர்தலை விட குறைந்த வாக்குப்பதிவு...காரணம் என்ன?

வாக்குப்பதிவு

கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் வாக்குச் சதவிகிதம் கணிசமாக குறைந்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 72.78 சதவிகித வாக்கு பதிவாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் 74.24 சதவிகித வாக்குகள் பதிவாகின. அதனுடன் ஒப்பிடுகையில் 1.46 சதவிகிதம் குறைந்துள்ளது.

  தமிழகத்தில் அதிகபட்சமாக கரூரில் 83.92 சதவிகிதமும், அரியலூரில் 82.47 சதவிகிதமும், தர்மபுரியில் 82.35 சதவிகிதமும், கள்ளக்குறிச்சியில் 80.14 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது.
  தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குபதிவாகி உள்ளது. அதேபோல், சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் 70 முதல் 80 சதவிகித வாக்கும், 7 மாவட்டங்களில் 60 முதல் 70 சதவிகித வாக்கும் பதிவாகி உள்ளது.

  மிக குறைந்த அளவாக சென்னயில் 59.06 சதவிகித வாக்குபதிவாகி உள்ளது. கடந்த முறை 60.99 சதவிகிதம் பதிவான நிலையில், 1.93 சதவிகிதம் சரிந்துள்ளது. சென்னையில் ஒவ்வொரு முறையும் வாக்கு சதவிகிதம் குறைய முக்கிய காரணம் மக்களிடம் இருக்கக்கூடிய சலிப்புதன்மை, வாக்களிப்பது குறித்து ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு வாக்காளர்களுக்கு சென்று சேராதது உள்ளிட்டவை முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

  அதேபோல், தொகுதிவாரியாக அதிகபட்சமாக பாலக்கோட்டில் 87.33 சதவிகிதமும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.52 சதவிகிதமும் பதிவாகி உள்ளது. 234 தொகுதிகளில் 37 தொகுதிகளில் 80 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்கு பதிவாகி உள்ளது. கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் வாக்குச் சதவிகிதம் குறையவில்லை என்றும், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் தற்போது வந்துள்ள சதவிகிதம் வரவேற்கக்கூடியது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

  சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்ப்பு குறைந்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக மக்கள் வெளியூர் செல்வது உள்ளிட்டவையும் காரணமாக முன்வைக்கப்படுகிறது. வாக்குச் சாவடிகளை அதிகப்படுத்தியது, வாக்களிக்க வரும் மக்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் பாராட்டக்கூடியது என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: