• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • TN Election Results 2021: துரைமுருகன், டிடிவி தினகரன், பிரேமலதா, வானதி பின்னடைவு

TN Election Results 2021: துரைமுருகன், டிடிவி தினகரன், பிரேமலதா, வானதி பின்னடைவு

முக்கிய வேட்பாளர்கள்

முக்கிய வேட்பாளர்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நட்சத்திர வேட்பாளர்களாகவும், கட்சியின் முக்கிய வேட்பாளர்களாக இருந்த பலரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

  • Share this:
    ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து அடுத்ததாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று நாடே எதிர்பார்த்து காத்திருந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திமுக கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான 117 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது வரை அக்கட்சி 143 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 89 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3-ம் இடத்தை பிடித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

    அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் 3-ம் இடத்தை பிடித்து பின்னடவை சந்தித்திருக்கிறார். அத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.குப்பன் முன்னிலை வகிக்கிறார். கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து போட்டியிட்ட டிடிவி தினகரன் அத்தொகுதியில் பின்னடவை சந்தித்து வருகிறார்.

    பண்ருட்டி சட்டமன்ற தொகுதி 6 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் 22, 372 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பின்னடவை சந்தித்துள்ளார்.

    விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி 8வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 25,323வாக்குகள் பெற்று 5790 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவில் உள்ளார்.

    காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் அத்தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். அத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.ராமு முன்னிலையில் உள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கிய குஷ்பு பின்னடைவை சந்தித்துள்ளார். அதேபோல ஆவடி தொகுதியில் மாஃபா.பாண்டியராஜன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

    கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மநீம வேட்பாளர் நடிகர் கமல்ஹாசன் அத்தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வானதி சீனிவாசன் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேபோல் அதிமுக அமைச்சர்கள் எம்.சி. சம்பத், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னிலையில் இருந்து வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: