மக்கள் நல்வாழ்வுக்கு முக்கியவத்துவம்: சிறப்பான செயல்பாட்டால் நன்மதிப்பை பெறும் மாவட்ட ஆட்சியர்கள்

Youtube Video

தமிழ்நாட்டில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள் தங்களின் சிறப்பான செயல்பாட்டால் குறுகிய காலத்திலேயே மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.

 • Share this:
  தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பின் மாவட்ட ஆட்சியர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எல்லோருக்கும் எல்லாம்" என்ற அடிப்படையில் ஆட்சியர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியர்கள் மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகின்றனர்.

  கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பம்பாளையத்தில் வசித்து வரும் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பேருந்து வசதியில்லாததால் அமராவதி ஆற்றை கடந்து செல்லும் நிலையில் இருந்தனர். இதையடுத்து மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அந்த கிராமத்திற்கு பேருந்து வசதிகளை ஆட்சியர் பிரபு சங்கர் செய்து கொடுத்தார். தங்களது, 30 ஆண்டுகால கோரிக்கையை மூன்றே நாட்களில் ஆட்சியர் நிறைவேற்றி கொடுத்துவிட்டதாக கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

  குடிநீர் உள்ளிட்ட பொதுப்பிரச்னைகளை தாண்டி ஊரக பகுதிகளுக்கு தேவையான திட்டங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

   

  நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற நிலையில், முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் வசிக்கும் பழங்குடியினரான காணி மக்கள் விளைவிக்கும் மலைத்தேன், நெல்லி இலை, வாழைப்பழம் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இயற்கை முறையில் விளைவித்ததற்கான தரச் சான்று பெற்றுத் தந்துள்ளார். இதன்மூலம் இடைத்தரகர்கள் யாருமின்றி மலைவாழ் மக்கள் தங்களது உற்பத்தி பொருட்களை நல்ல விலைக்கு விற்று வருகின்றனர். பாளையங்கோட்டையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் செயல்படும் கைவினை பொருட்கள் விற்பனை மையத்தில் காணி மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்கவும் ஆட்சியர் விஷ்ணு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

  கோவை மாவட்ட ஆட்சியரான சமீரன் திருநங்கைகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருநங்கைகளுக்கான ஆதார் கார்டு, ரேசன் கார்டு, நல வாரிய கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளை ஒரே இடத்தில் பெற ஏற்பாடு செய்தார். இந்த சிறப்பு முகாமில் 200 க்கும் மேற்பட்ட திருநங்கை மற்றும் திருநம்பிகள் கலந்து கொண்டனர். மேலும், மூன்றாம் பாலினத்தவருக்கு சம உரிமை அளிக்கும் வகையில் திருநங்கைகளுக்கு என சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமிற்கும் ஏற்பாடு செய்தார்.

  மனநலம் பாதித்தவர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், வயது மூப்பால் பாதிக்கப்பட்டவர்கள், மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் அமைக்கப்படுள்ளது.

  மேலும், மதுக்கரை வட்டம் மாவுத்தம்பதி கிராமத்தில் 30 ஆண்டுகளாக பட்டா வசதியின்றி தவித்த 15 குடும்பங்களுக்கு ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் பட்டா வழங்கப்பட்டது. அத்துடன், 15 குடும்பங்களுக்கு ஊராட்சி மூலம் இலவசமாக வீடு கட்டிக் கொடுக்க மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எல்லோருக்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக சேவையாற்றி வருவது பாராட்டக்குறியதே.
  Published by:Karthick S
  First published: