ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை!

பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை!

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Jallikattu: விலங்குகள் வதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்கு முழுமையான தடையை விதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுகள் விலங்குகளை கொடுமைப்படுத்தும் செயல், இதுபோன்ற விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது எனவும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் சிறப்பு சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் பீட்டா அமைப்பு மற்றும் விலங்குநல ஆர்வலர்கள் பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

  பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசியல் சாசன விதிகள் தொடர்புடைய மனுக்கள் என்பதால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சிட் ரவிக்குமார் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

  இதையும் படிங்க:Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

  ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விலங்குகளை முன்னிலைப்படுத்தி விளையாடபடும் விளையாட்டுகள் விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகளை மீறுகின்றனவா? ஜல்லிக்கட்டு, சக்கடி விளையாட்டுகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள சட்டங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானவையா? தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டம், கலாச்சார விதிகளின் கீழ் பாதுகாப்பு பெறுகிறதா? பாரம்பரிய நாட்டு மாடு இனங்களை பாதுகாக்கவும், அவற்றின் இன வளர்ச்சிக்கும் ஜல்லிக்கட்டு சட்டம் உதவுகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அரசியல் சாசன அமர்வு இந்த விரிவான விசாரணையை நடத்த உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

  அதில், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தோடு ஒன்றிய விளையாட்டு. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு எப்போதும் மரியாதை உண்டு. காங்கேயம், உம்பலசேரி, ஆலம்பாடி, புளிக்குளம் மற்றும் பர்கூர் ஆகிய 5 வகை நாட்டு மாடுகள், இரண்டு வகையான நாட்டு எருமை வகைகள், 10 வகையான ஆடுகள் உள்ளிட்ட பாரம்பரிய நாட்டு விலங்கு இனங்கள் தமிழகத்தில் உள்ளன.

  இதில் 5 மாட்டு இனங்களும், பால் உற்பத்தியில் பெரி அளவில் ஈடுபடவில்லை என்றாலும், விவசாயப் பணிகளில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால் சமீப காலங்களில் இவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும், உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தரவுகள் அடிப்படையின், 22 இன மாடுகள் அழிவை சந்தித்து வருகின்றன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசின் சர்வே தரவுகள் அடிப்படையில், கடந்த 1996 ஆம் ஆண்டு 4,79,000 ஆக இருந்த காங்கேயம் காளைகளின் எண்ணிக்கை, கடந்த 2013 ஆம் ஆண்டு 80,620 ஆக குறைந்து இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சட்டத்திர்கு பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வே அடிப்படையில் , காங்கேயம் மாடுகள் எண்ணிக்கை 1,27,577 ஆக உயர்ந்துள்ளது.

  ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்தால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். நாட்டு இன மாடுகளை வளர்க்கும் ஆவல் இல்லாமல் போய்விடும். தமிழக பாரம்பரியம் அழிவு நிலைக்கு செல்லும். எனவே வன்கொடுமை தடுப்பு/விலங்குகள் வதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்கு முழுமையான தடையை விதிக்கக் கூடாது.

  அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்த, மக்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. விதிகள் 14 & 21 மற்றும் விகிதாச்சாரக் கோட்பாட்டின் படி விலங்குகளுக்கு ஏதேனும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்கும் வகையில் குறுகிய வரம்புகள் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில், முழுமையான பாதுகாப்புகள், கண்காணிப்புகள் கீழ் தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுகின்றன.

  போட்டிகளை நடத்த உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. காளைகளுக்கு உரிய பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் மேற்பார்வையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளுக்கு முன்னதாக தலைமைச் செயலாளர், 14 மாவட்ட ஆட்சியர்களுடன் போட்டியை பாதுகாப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். விலங்குகள் நலவாரியத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழு ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணித்து வருகிறது..

  அரசியல் சாசன பிரிவு 21 படி விலங்களுக்கு அடிப்படை உரிமை இல்லை. தனி உரிமை என்பது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். தனி உரிமை உள்ளதாகக் கருதப்பட்டால், உரிமைகள் சமநிலைப்படுத்தப்பட வேண்டும். விலங்குகளின் உரிமையைக் கருதி மனிதர்களின் உரிமையைப் புறக்கணிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மக்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. இரு தரப்பு உரிமைகளும் சமநிலைப்படுத்தப்பட வேண்டும்.

  இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என உத்தரவு பிறப்பித்து மற்ற மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எழுத்துமூலமான வாதத்தை முன்வைத்துள்ளது.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Jallikattu, Supreme court