• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மிக்சி, வாஷிங் மெஷின் பரிசுகள் வழங்கி கொரோனா தடுப்பூசி முகாம்- ஒரே நாளில் 22 லட்சம் பேருக்கு டோஸ்

மிக்சி, வாஷிங் மெஷின் பரிசுகள் வழங்கி கொரோனா தடுப்பூசி முகாம்- ஒரே நாளில் 22 லட்சம் பேருக்கு டோஸ்

Youtube Video

தமிழ்நாட்டில் 5-ம் கட்டமாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் சுமார் 22.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அரிசி, பெட்ரோல், மிக்சி, வாஷிங் மெஷின் என பரிசுகள் வாரி வழங்கப்பட்டன.

  • Share this:
    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் இடங்களில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னையில் அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி பொதுமக்கள் கூடும் இடங்கள் என 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

    சென்னையில் மடுவின்கரையில் உள்ள ஆயுஷ் மருத்துவமனை மற்றும் சின்னமலையில் உள்ள புனித சேவியர்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட முகாமில், ஏராளமான வடமாநில இளைஞர்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.

    சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி முகாம்கள் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம், மாநில சராசரியைவிட குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

    கோவை மாவட்டத்தில் 1,475 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து மையங்களிலும் விரைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார்.

    மதுரை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் சைக்கிள், மிக்சி, வாஷிங் மெஷின், பிரஷர் குக்கர், சில்வர் பாத்திரம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் தடுப்பூசி முகாமை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிளாஸ்டிக் குடம், எவர்சில்வர் தட்டு உள்ளிட்ட பரிசுபொருட்களை கு.பிச்சாண்டி வழங்கினார்.

    திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தலா 3 கிலோ அரிசியை ஆட்சியர் முருகேஷ் வழங்கினார். வேங்கிக்கால் ஊராட்சிக்குட்பட்ட மற்றொரு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் 150 நபர்களுக்கு தனியார் பெட்ரோல் பங்க் சார்பில் இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மக்கள் ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான மையங்கள் வெறிச்சோடின. ஒட்டேரியில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்களுக்கு சேலைகள் பரிசாக வழங்கப்பட்டன.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் தேவிப்பட்டினத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

    அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வலியுறுத்தி ஈரோடு சாஸ்திரி நகரில் சுகாதார பணியாளர்கள் கொரோனா விழிப்புணர்வு பாடல்களை பாடி நடனமாடியபடி வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: