கொரோனா கட்டுப்பாடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

மு.க.ஸ்டாலின்

கொரோனா 2வது அலை கட்டுக்கடங்காமல் பரவி வரும் சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

 • Share this:
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை மே 7ம் தேதி பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தியில், திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு, தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஆளுநர் முன் உறுதிமொழி எடுத்துக்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், 1996 முதல் 2001 வரை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

  இந்தநிலையில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11ஆம் தேதி கூடும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில் 11ம் தேதி காலை 10 மணிக்கு முதல் கூட்டத்தொடர் தொடங்கும் எனவும், அப்போது புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் 12ஆம் தேதி நடைபெறும் என்றும் சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.

  இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் கொரோனா 2வது அலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. முழு ஊரடங்கை சரியான முறையில் அமல்படுத்துவது குறித்தும், பிற பிரச்னைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  முன்னதாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் வந்து செல்லும் நுழைவு வாயிலின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், தலைமைச் செயலகத்தில், அவருக்கான அறைக்கு சென்று பணிகளை தொடங்கினார். அப்போது அறையின் உள்ளே புகைப்படங்கள் இருந்தால் மட்டும் போதுமானது என்றும், முகப்பு பகுதியில் படங்கள் வைப்பதை தவிர்க்கலாம் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, முகப்பு பகுதியில் இருந்த படங்கள் அகற்றப்பட்டன.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: