Tamilnadu Cabinet 2021 | தமிழக அமைச்சரவையில் காந்தி, நேரு, ஸ்டாலின்

முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7-ம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெறுகின்றனர். இதில் இம்முறை காந்தி, நேரு, ஸ்டாலின் என்று அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது ருசிகரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

 • Share this:
  தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

  பொதுவாக ஷேக்ஸ்பியரின் ஒரு புகழ்பெற்ற கருத்தாடல் உண்டு, What’s in a name? அதாவது பெயரில் என்ன இருக்கிறது? என்பார், ஆனால் பெயர் என்ன சாதாரணப்பட்ட விஷயமா? அதில்தான் பிரபஞ்சமே அடங்கியிருக்கிறது என்று நினைக்கக் கூடியவர்கள் நம்மவர்கள்.

  தமிழக அமைச்சரவையில் காந்தி, நேரு, ஸ்டாலின் ஆகியோர் உள்ளது ஒரு ருசிகரமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 34 அமைச்சர்களுக்கான பட்டியலுக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அனுமதி கொடுத்து விட்டார்.

  இதில் திருச்சியைச் சேர்ந்த மூத்த திமுக தலைவர் கே.என்.நேருவுக்கு நகர்ப்புற நீர் விநியோகத்தை கவனித்துக் கொள்ளும் மாநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆர்.காந்திக்கு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக ஆயிரம் விளக்குத் தொகுதியிலிருந்து 1989ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மலர்ந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவர் மிகவும் சவாலான ஒரு காலக்கட்டத்தில் இந்தப் பதவியில் அமர்ந்திருக்கிறார், முதல் சவால் கொரோனா. 2வது சவால் முரண்பட்ட மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் சவால், உயரும் விலைவாசிகள், வேலைவாய்ப்பு என்று அவருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன, அதிலும் பெட்ரோல் விலையை ரூ.5 குறைப்பதாகவும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாகவும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார், இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டியாக வேண்டும். மத்திய அரசிடமிருந்து அவ்வப்போது ஜிஎஸ்டி பங்கை பெற வேண்டும், நிறைய பிரச்னைகளுக்கு இடையே ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

  ஆர்.காந்தி முதலில் 1996ம் ஆண்டு ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். காந்தி மற்றும் இவரது மனைவி மகன் மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருந்தது, பிறகு அது ஆதாரங்கள் இல்லை என வழக்கு முடிக்கப்பட்டது.

  கே.என்.நேரு திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவர் திருச்சி மேற்குத் தொகுதியிலிருந்து தொடர்ந்து 5வது முறையாகப் போட்டியிட்டுள்ளார். வென்று மீண்டும் அமைச்சராகியுள்ளார். ஜவகர்லால் நேரு பெயரை தன் மகனுக்குச் சூட்டி நேருவின் தந்தை அழகுபார்த்தார். கே.என்.நேருவின் தந்தை ஒரு வலுவான காங்கிரஸ் ஆதரவாளர். ஆனால் 1960களின் பிந்தைய காலக்கட்டத்தில் இவரது குடும்பம் திமுகவை ஆதரித்தது. 1989-ல் வென்ற பிறகே கே.என்.நேரு திமுகவில் ஒரு முக்கியஸ்தராகத் திகழ்ந்து வருகிறார். இப்போது மீண்டும் அமைச்சர் பதவியில் அமர்ந்துள்ளார். திருச்சி மக்கள் இவரிடமிருந்து நிறைய நல்ல காரியங்களை எதிர்பார்க்கின்றனர்.

  234 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் மே 2ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் திமுக 133 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக 66 இடங்களை வென்றது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றது. பாஜக 4 இடங்களில் வென்றது.
  Published by:Muthukumar
  First published: