Home /News /tamil-nadu /

ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட்: கமல்ஹாசன்

ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட்: கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

மய்யத்தின் செயல் திட்டம், மாற்றுக்கட்சியின் வாக்குறுதியாக வந்தபோது வரவேற்றோம். அது வெறும்சொல்லாகப் போனதே ஆதங்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

    தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது. இடைக்கால பட்ஜெட்டை போலவே இதுவும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த பட்ஜெட்டில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், தமிழக அரசின் நிதி நிலை அறிக்கைக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பும், விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட் என விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட். அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறப் பண உதவி, பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்க்க நிதி, மாநிலம் முழுதும் நூல்களுக்கான திட்டம் போன்றவை நம்பிக்கை தருகின்றன.



    அதே நேரத்தில் அழுத்தம் திருத்தமாக அளிக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றைப் பற்றிய பேச்சே இல்லை. குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்குவதாகச் சொன்னதுதான் அது. மய்யத்தின் செயல் திட்டம், மாற்றுக்கட்சியின் வாக்குறுதியாக வந்தபோது வரவேற்றோம். அது வெறும்சொல்லாகப் போனதே ஆதங்கம்.

    எரிவாயு விலையைக் குறைக்கும் அறிவிப்பிருக்குமென எதிர்பார்த்ததிலும் ஏமாற்றம். இப்போது தரப்பட்டிருக்கும் திட்டங்களேனும் நடைமுறைக்கு வருமா என்று சாமானிய மக்கள் சந்தேகம் கொண்டால் அது நியாயம்தானே? சொல் அல்ல, செயல் என்று காட்டும் அரசே மக்கள் நம்பிக்கையைப் பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Kamal hassan, TN Budget 2022

    அடுத்த செய்தி