Home /News /tamil-nadu /

வரலாற்றில் முதல் இ-பட்ஜெட், 3 மணி நேரம் உரை... 50 முக்கிய அம்சங்கள்

வரலாற்றில் முதல் இ-பட்ஜெட், 3 மணி நேரம் உரை... 50 முக்கிய அம்சங்கள்

பட்ஜெட் உரை

பட்ஜெட் உரை

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.

  தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற 50 முக்கிய அம்சங்கள்

  1. நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  2. சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை வாசிக்கும் தொடங்கும் போதே அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.

  3. தேர்தல் பிரசாரத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

  4. 2021-2022 திருத்திய நிதிநிலை அறிக்கை ஆறு மாதங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.

  5. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் மூலம் இதுவரை 2,29,216 மனுக்களுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது.

  6. பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும்.

  7. தமிழ்நாடு அரசுக்கென தனி கொள்முதல் வலைதளம் உருவாக்கப்படும்.

  8. 2007-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் சொந்த தமிழ்நிலம் தரவு தளப் பதிவின்படி 2.05லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

  9. பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட அரசு நில மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டு, அரசின் நிலங்களை ஆக்கிரமிப்பது தடுக்கப்படும்.

  10. ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவளமேம்பாட்டு திட்டம் மூலம் அனைத்து அரசு நிதியும் கருவூல அமைப்பின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும்.

  11. தமிழ்நாட்டின் நிதிநிலையைச் சரிசெய்ய மூன்று ஆண்டுகள் தேவைப்படும்.

  12. கீழடி, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய தொல்லியல் ஆய்வுகள் நடக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, இந்தப் பணிகளுக்கு ரூபாய் ₹5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

  13. அரசின் நிதி சார்ந்த வழக்குகளைக் கையாள ‘வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு' உருவாக்கப்படும்.

  14. சங்ககால துறைமுகங்கள் அமைத்திருந்த இடங்களில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

  15. ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி கலைஞர் செம்மொழி தமிழ் விருது ₹10 லட்சம் பரிசுடன் வழங்கப்படும்.

  16. முதலமைச்சரின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் வரவு செலவு திட்டத்தில் முத்திரை பதித்துள்ளன!

  17. தகுதியான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்க வழி செய்யப்படும்.

  18. சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி 4,807 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

  19. கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

  20. அனைத்து குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய தரவுகள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  21. தமிழ்நாடு முழுவதும் வெள்ளத் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

  22. தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூபாய் 80கோடி நிதி ஒதுக்கப்படும்.

  23. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

  24. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கான நிதி நடப்பு ஆண்டில் இருந்து ஒரு தொகுதிக்கு மூன்று கோடி ரூபாயாக மீண்டும் அளிக்கப்படும்.

  25. தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளிலும் தமிழ் ஆட்சிமொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  26. காவல்த்துறையில் உள்ள 14,317 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

  27. மத்திய அரசிடம் இருந்து ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையினைப் பெற நிபுணர் குழு அமைக்கப்படும்.

  28.  செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3ம் தேதி 10 லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும்.செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின்கீழ் தமிழ்ப் படைப்புகள் மொழிபெயர்க்கப்படும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்குப் புத்துயிர் அளிக்கப்படும்.

  29. சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மொத்தம் 150 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். கடல் பாசி வளர்ப்பு மீன் வளர்ப்பு மற்றும் கடல்வாழ் உயிரின வளர்ப்பு உள்ளிட்ட மாற்று வாழ்வாதாரம் திட்டங்களும் ஊக்குவிக்கப்படும்.

  30. நீதித்துறையின் மேம்பாட்டுக்காக ரூபாய் 1713கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

  31. இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசுதான் அதிகபட்ச கொரோனா நிவாரண நிதியினை மக்களுக்கு வழங்கியுள்ளது. கொரோனா கால நிவாரண தொகையாக இதுவரை ரூ.9,370.11 கோடி வழங்கப்பட்டுள்ளது.

  32. தமிழ்நாடு ரேஷன் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.

  33. அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு முழுக்க 1000 தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டப்படும்.

  34. மேட்டூர், வைகை, அமராவதி, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க அளவு உயர்த்தப்படும். கல்லணை கால்வாய் புதுப்பித்தல், விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இருந்து 2639.15 கோடி நிதி உதவி பெறப்பட்டுள்ளது.

  35. தமிழ்நாட்டின் உணவு மானியத்திற்கான தொகை ரூபாய் 8437.57 கோடியாக உயர்த்தப்படும்.

  36. தமிழ்நாடு மீனவர் நலனுக்காக ரூபாய் 1149 கோடி செலவிடப்படும். காசிமேடு மீன்படி துறைமுகம் ரூபாய் 150 கோடியில் மேம்படுத்தப்படும்.

  37. தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிதாக மீன்படி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்க 433 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  38. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அரசின் சொந்தக் கட்டடம் கட்டித்தரப்படும்.

  39. பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம்செலுத்த பருவநிலைமாற்ற இயக்கம் அமைக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

  40. கிராமப்புறங்களில் ரூபாய் 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டுகளுக்குக் குடிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ஜல்ஜீவன் இயக்கம் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும்.

  41. மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் புதுப்பிப்பதற்காக தலா 6 கோடி ரூபாய் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்தி, அச்சமூகத்திற்கு சொந்தமான வக்பு சொத்துக்களை அரசு பாதுகாக்க முடியும்.

  42. போதிய நிதி வசதி இல்லாத 12959 திருக்கோவில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில் 130 கோடி ரூபாய் நிலை நிதி ஏற்படுத்தப்படும். திருக்கோவில்களில் நிர்வகிக்க பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

  43. அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு.

  44. தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள திருவண்ணாமலை தருமபுரி திருநெல்வேலி விருதுநகர் சிவகங்கை விழுப்புரம் நாமக்கல் தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

  45. தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை அமைக்க கலைஞர் திட்டமிட்டார் அதற்குரிய நிலமும் கண்டறியப்பட்டது பின்னர் இத்திட்டம் செயல்படுத்தப்பட வில்லை தமிழ்நாடு சித்தா பல்கலைக் கழகத்தை இந்த அரசு அமைத்திடும் இதற்கென முதற்கட்டமாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும்

  46. இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். 25 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும்.

  47. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.  மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

  48. ரூ.1000 உதவித்தொகை பெற குடும்பத் தலைவரின் பெயரை மாற்ற தேவையில்லை. இத்திட்டத்திற்கு தகுதிவாய்ந்த குடும்பங்கள் கண்டறியப்பட்டு ரூ.1000 உதவித்தொகை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

  49. பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை மூன்று ரூபாய் குறைப்பு

  50. விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில்  சிறு விளையாட்டு அரங்குகள் நிறுவப்படும்.  தமிழ்நாடு சுற்றுலா துறைக்கு ரூ.187.50 கோடி நிதி ஒதுக்கீடு.

  Published by:Vijay R
  First published:

  Tags: TN Budget 2021

  அடுத்த செய்தி