Home /News /tamil-nadu /

இலங்கைத் தமிழர்களிடம் பணம் வசூலிப்பதை தமிழகப் படகு உரிமையாளர்கள் கைவிட வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்

இலங்கைத் தமிழர்களிடம் பணம் வசூலிப்பதை தமிழகப் படகு உரிமையாளர்கள் கைவிட வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்

வேல்முருகன்

வேல்முருகன்

தமிழர்கள் நமக்கு கைக்கொடுப்பார்கள் என்ற எண்ணத்தில், நமது உதவியை நாடி வருகின்றனர். அவர்களிடம் நாம் பெரும் தொகையை வசூலிப்பது முறையல்ல. அது தமிழர்களின் பண்பாடும் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இலங்கைத் தமிழர்களிடம் பணம் வசூலிப்பதை தமிழகப் படகு உரிமையாளர்கள் கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எற்கெனவே, இலங்கைக்கு 7,500 கோடி ரூபாயை கடனாக கொடுத்து இந்தியா உதவி செய்தது. இருப்பினும், அங்கு ஒரு கிலோ அரிசி 500 ரூபாய் வரையும், சர்க்கரை 290 ரூபாய்க்கும், 400 கிராம் பால் பவுடர் 790 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அத்துடன் டீக்கடைகளில் ஒரு கோப்பை டீ.100 ரூபாய்க்கும், பெட்ரோல் 254 ரூபாய்க்கும், டீசல் 214 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும், பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு பொதுமக்கள் முண்டியடிப்பதோடு, சில இடங்களில் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறியதால், பெட்ரோல் பங்குகள் அனைத்தும் ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன் பேப்பர் வாங்க பணம் இல்லாததால், தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதனிடையே, இலங்கையில் விடுதலைப்புலிகள் உடனான போரின் போது, தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்ததைப் போல, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார நெருக்கடி காரணங்களால், தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.

    Also read... பாலியல் தொல்லை வழக்கு: பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபியின் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை

    இந்நிலையில்,  தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களிடம் பணம் வசூலிப்பதை தமிழகப் படகு உரிமையாளர்கள் கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.284 ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

    இலங்கையில் தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.290, சர்க்கரை ரூ.290, 400 கிராம் பால் பவுடர் ரூ.790 என்ற விலையில் விற்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் இலங்கையில் ராஜபக்சே கும்பல் அரசின் அலட்சியமான அணுகுமுறையே. பட்டினிச் சாவிலிருந்து எப்படித் தற்காத்து கொள்வது என தெரியாமல், கோத்தய கும்பலை 'வீட்டிற்கு செல்' என்ற முழக்கத்துடன், அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான உணவு தட்டுப்பாடு, வேலையின்மை காரணமாக யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். அடுத்து வரும் நாட்களில் மேலும், அதிக எண்ணிக்கையில் தமிழகத்திற்கு பலர் அகதிகளாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    எனவே, தமிழகத்திற்கு அகதிகளாக வரும் இலங்கை தமிழர்களுக்கு போதுமான வசதிகளை ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மேலும், இது குறித்து இன்று தமிழக முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, தப்பி வரும் இலங்கை தமிழர்களில் பெண்கள், குழந்தைகள் முதலியவர்களை அகதி முகாம்களிலும், ஆண்களை புழல் சிறையிலும் அடைப்பது குறித்து இன்று (24-03-2022)காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் நேரில் சந்தித்து எடுத்துரைத்தேன்,

    அதைக் கனிவுடன் கேட்ட முதல்வர் விரைவில் மத்திய அரசுடன் பேசி, இந்தச் சிக்கலை சரி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒருபுறமிருக்க, இலங்கையில் இருந்து பெரும் கவலையோடு வரும் இலங்கை தமிழர்களை, தமிழகத்திற்கு அழைத்து வர, தமிழக படகு உரிமையாளர்கள் பெரும் தொகையை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இது அதிர்ச்சி ஏற்படுத்துவதோடு, வேதனையளிக்கிறது.

    உணவின்றி, வேலையின்றி, தங்களது குழந்தைகளுக்கு பால் பவுடர் கூட வாங்க முடியாத அவல நிலையில், தமிழகத்திற்கு சென்றால் எப்படியாவது பிழைத்து கொள்ளலாம், தமிழர்கள் நமக்கு கைக்கொடுப்பார்கள் என்ற எண்ணத்தில், நமது உதவியை நாடி வருகின்றனர். அவர்களிடம் நாம் பெரும் தொகையை வசூலிப்பது முறையல்ல. அது தமிழர்களின் பண்பாடும் அல்ல.

    அதனால், தங்களின் வாழ்வாரத்தை காப்பாற்றிக்கொள்ள வரும் இலங்கைத் தமிழர்களிடம், பணம் வசூலிப்பதை தமிழகப் படகு உரிமையாளர்கள் கைவிடுவதோடு, அவர்களுக்கு அரணாக நிற்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Srilankan Tamil, Tamil Refugees, Velmurugan

    அடுத்த செய்தி