தமிழகத்தில் இ-சிகரெட் விற்பனைக்கு தடை

இ-சிகரெட்-க்கு தடை

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழகத்தில் இ-சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  இ-சிகரெட் எனும் எலக்ட்ரானிக் சிகரெட்டை தடை செய்வதாக கடந்த ஜூன் 14-ம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கடந்த 3-ம் தேதியிட்ட அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இ-சிகரெட்டில் உள்ள மூலக்கூறுகள் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கொண்டிருப்பதாகவும் தீவிரமான நுரையீரல் பிரச்னை என்றும், கர்ப்பிணிக்கும், சிசுவுக்கும் கேடு விளைவிக்கும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

  பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், காவல், கல்வி, சுகாதாரத்துறைகளைச் சேர்ந்த 68,000-க்கும் மேற்பட்டோருக்கு போதைப்பொருள் கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீடி, சிகரெட்டுக்கு இணையாகவோ, அதைவிட அதிகமாகவோ அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் இ-சிகரெட்கள் மற்றும் அதனைப் போன்ற சிகரெட்களின் உற்பத்தி, விற்பனை, விநியோகம், இறக்குமதி, பயன்பாடு, காட்சிப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு தமிழகத்தில் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

  ஏற்கெனவே மத்திய அரசு இ-சிகரெட்களுக்கு தடை விதித்திருந்தது. சிகரெட்டை போன்றே இ-சிகரெட்டும் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதால், அதற்குத் தடைவிதிப்பது குறித்து ஆய்வு செய்ய 3 துணைக்குழுக்களை அமைத்துள்ளதாக சமீபத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியிருந்தார். அதன்படி, இந்தியாவில் இ-சிகரெட் விற்பனைக்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

  புகையிலை சிகரெட்டை பிடிப்பவர்களைவிட தினமும் இ-சிகரெட் பிடிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு மாரடைப்பு நோய் வருவதற்கான ஆபத்து 2 மடங்கு அதிகமாக உள்ளதென புதிய ஆய்வு கூறுகிறது. சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

  உலகின் பல நாடுகளில் இ-சிகரெட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மத்திய அரசும், தமிழக அரசும் இதற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vaijayanthi S
  First published: