Home /News /tamil-nadu /

நேரலை ஒளிபரப்புக்கு தயாராகும் தமிழக சட்டப்பேரவை

நேரலை ஒளிபரப்புக்கு தயாராகும் தமிழக சட்டப்பேரவை

சட்டப்பேரவை

சட்டப்பேரவை

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பும் வகையில் நவீன தொழில்நுட்ப முறையில் சட்டப்பேரவை வளாகம் புதுபிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையுடன் பேரவை நிகழ்வுகள் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டு வருகிறது. புதிதாக ஆட்சி அமைக்கப்பட்ட பின்பு நடைபெற்ற சட்டப்பேரவை  பட்ஜெட் கூட்டத்தொடரில் பேரவை நிகழ்வுகள் எப்போது நேரலையில் ஒளிபரப்பபடும் என்று கேள்வி எழுப்பபட்டது. அப்போது, புனித ஜார்ஜ் கோட்டையில் பேரவை நிகழ்வுகள் நடைபெறும்போது நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து கொரோனாவும் குறைந்து வருவதால், தமிழ்நாடு சட்டப்பேரவை அதிகாரிகள் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கோவா, டெல்லி போன்ற மாநிலங்களிலும், மக்களவை மாநிலங்களவையிலும் நேரடி ஒளிபரப்பு செய்யும் தொழில்நுட்ப மற்றும் நடைமுறைகளை ஆய்வு செய்து வந்தனர்.

இதன் அடிப்படையில், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தை புதுபிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காகிதமில்லா சட்டப்பேரவை என்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதோடு, உறுப்பினர்களுக்கு வழங்ககூடிய அனைத்து ஆவணங்களும் கணிப்பொறியில் தெரியும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதே போன்று புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பாரம்பரிய பேரவை வளாகத்திலும் நவீன முறையில் டச் ஸ்கிரின் கணிப்பொறிகள் உறுப்பினர்கள் அமரும் மேஜை மீது வைக்கப்படவுள்ளது. இங்கும் காகிதமில்லா பேரவையாகவே நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

கொரோனா குறைத்து இருந்தாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் ஆளுநர் உரை நிகழ்த்துவது புனித ஜார்ஜ் கோட்டையாக இருந்தாலும், கலைவாணர் அரங்கம் என்றாலும் இரு இடத்திலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கும் என்றும், அப்போதைய சூழலை பொறுத்து எங்கு நடத்துவது என்பது முடிவு செய்யப்படும் என்று சட்டப்பேரவை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

எனவே, புனித ஜார்ஜ் கோட்டையில் பேரவை கூட்டம் நடத்தப்பட்டால் நேரலையில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக மக்களைவை மாநிலங்களைவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது போல, தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளையும் நேரடி ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்த்து. இந்த நிலையில் விரைவில் நேரலையில் பேரவை நிகழ்வுகளை பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் இந்தியாவில் இன்று ஓமைக்கரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ள நிலையில் வரும் மாதத்தில் அது தமிழகத்தில் பரவாமல் இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஒருபுறம் தமிழ்நாடு சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. எனவே நோய்த்தொற்றின் தீவிரத்தை பொருட்டு தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரை எப்போது எந்த இடத்தில் நடத்தலாம் என்பது குறித்து சூழலுக்கேற்ப முடிவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி