பெண்கள் வாக்குவங்கியை கவரப்போகும் கட்சி எது? பொள்ளாச்சி சம்பவம்: ஆ.ராசா பேச்சு விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பெண்கள் வாக்குவங்கியை கவரப்போகும் கட்சி எது? பொள்ளாச்சி சம்பவம்: ஆ.ராசா பேச்சு விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா?

மாதிரிப் படம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் வாக்குகளை எந்தக் கட்சி கவரவுள்ளது என்பது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3,08,38,473 பேரும், பெண் வாக்காளர்கள் 3.18,28,727 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,246 பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் பெண் வாக்களார்களே அதிக அளவில் உள்ளனர். அதனால், தமிழக அரசியல் கட்சிகளும் பெண்களைக் கவரும் பல்வேறு அறிவிப்புகளைத் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

    தி.மு.க தேர்தல் அறிக்கையில், ‘மாநகர அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய், சிலிண்டருக்கு 100 மானியம் உள்ளிட்ட பெண்களைக் கவரும் அறிவிப்புகளை தி.மு.க வெளியிட்டுள்ளது. தி.மு.கவின் 1,000 ரூபாய் அறிவிப்புக்கு பொதுமக்களிடையே வரவேற்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ‘குடும்பத்துக்கு வாஷிங்மெஷின், பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய், வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றன. அ.தி.மு.கவின் அறிவிப்புகளும் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றன.

    தமிழக அரசியல் களத்தில் பெண் வாக்காளர்களின் வாக்குகள் எப்போதும் முக்கிய பங்காற்றியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது. அது அவருக்கு வாக்காகவும் மாறி தேர்தல் வெற்றிக்கு உதவியது. முன்னதாக, அ.தி.மு.க நிறுவனரும் நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆருக்கும் பெருமளவில் பெண்கள் வாக்கு வங்கி இருந்தது.

    அ.தி.மு.கவுக்கு முக்கிய வாக்கு வங்கியாக பெண்கள் இருந்தநிலையில், தற்போது ஜெயலலிதா இல்லாத நிலையில் முன்பு போலவே பெண்கள் வாக்கு வங்கியை தக்கவைக்க முடியுமா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

    பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரமும், கன்னியாகுமரி மாவட்டம் காசியால் பெண்கள் பாதிக்கப்பட்ட விவகாரமும் அ.தி.மு.கவுக்கு பெருமளவில் பெண்கள் வாக்குகளைப் பாதிக்கும் அம்சமாக உருவெடுத்துள்ளது. பிரதான எதிர்கட்சியான தி.மு.கவும் கோவைப் பகுதியில் பிரச்சாரம் செய்யும் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கையில் எடுத்து பிரச்சாரம் செய்துவருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்படும் என்று பிரச்சாரத்தை தி.மு.க முன்னெடுத்துள்ளது.

    இருப்பினும், இந்தப் பிரச்சாரம் மட்டும் பெண்கள் வாக்குகளை கவருவதற்கு போதுமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான். இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அம்மா குறித்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா பேசியதாக பரவும் வீடியோ தி.மு.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி குறித்து ஆ.ராசா பேசும் வீடியோ இணையத்தில் வைரலானது. ஆ.ராசாவின் உருவ பொம்மையை எதிர்த்து அ.தி.மு.கவினர் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து, ஆ.ராசா மன்னிப்பு கேட்கும் சூழல் ஏற்பட்டது. முன்னதாக கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு வாக்கு சேகரித்த திண்டுக்கல் லியோனி பெண்கள் குறித்து பேசிய பேச்சும் விமர்சனமானது.

    இதுதொடர்பாக தொடர் சர்ச்சை பேச்சுகள் தி.மு.க மீது அதிருப்தியை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து தி.மு.கவினர் பொறுப்புடன் பேசவேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிடும் சூழலை உருவாக்கியது. இந்தச் சம்பவங்கள் தி.மு.கவுக்குச் செல்லும் கணிசமான பெண்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கான வாய்ப்புள்ளது.

    ஏற்கெனவே, புதிய தலைமுறை வாக்காளர்களின் மனநிலை அ.தி.மு.க, தி.மு.கவுக்கு மாற்று தேடவேண்டும் என்ற எண்ணவோட்டத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக, புதிய தலைமுறை இளம் பெண் வாக்காளர்கள் அ.தி.மு.க, தி.மு.க மாற்று தேடுகின்றனர். அவர்களின் விருப்பமாக மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும் உள்ளன. நாம் தமிழர் கட்சியில் 117 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பெண்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல, கமல்ஹாசன் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பெண்கள் சார்ந்து குறிப்பிட்ட முக்கிய அம்சங்களும் பெண்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    தமிழகத்தில் கமல்ஹாசன்தான் முதன்முதலில் வீட்டு வேலை செய்யும் குடும்பத் தலைவிகளுக்கு அவர்களுடைய உழைப்பு மதித்து உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற கருத்தை முன்வைத்தார். அதன் தொடர்ச்சியாக அவருடைய தேர்தல் அறிக்கையில் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு 3,000 ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். படித்த மகளிருக்கு GIG Workers வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு இதன்மூலம் அவர்கள் ஓய்வு நேரத்தில் குறைந்தது ரூ.1,000 முதல் ரூ.20,000 சம்பாதிக்க வழி வகை செய்யப்படும். அதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்’ என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, நகர்புற பெண்கள் மற்றும் இளம்தலைமுறை பெண்கள் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்தமுறை தேர்தல் வெற்றியில் முக்கிய பங்காற்றும் பெண்கள் வாக்குகளை எந்தக் கட்சிபெறும் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: