TAMIL NADU ASSEMBLY ELECTION HAS MONEY DISTRIBUTION HAPPENED SKD
ஜிபே மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா? தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?
மாதிரிப் படம்
தேர்தல் சமயத்தில் பணப்பட்டுவாடா செய்ய புதிய முறைகளை கையாளும் அரசியல்வாதிகள் இந்த முறை தொழில்நுட்பத்தின் உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Gpay உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப்பட்டுவடா நடக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனைமுன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் புகார் எழுந்துவருகிறது. இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல், அதிகாரிகள், எதிர்க்கட்சியினரிடம் சிக்காமல், ரகசியமாக பணப்பட்டுவாடா செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல; ஆனால், அரசியல்கட்சியினர் சளைத்தவர்கள் அல்ல. பணப்பட்டுவாடாவுக்கு புதிய முறைகளை கண்டுபிடித்துள்ளனர்.
வாக்காளர்களின் செல்போன் எண்களை சேகரித்து, கூகுள்-பே மற்றும் ஆன்லைன் பண பரிமாற்ற தளங்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்வதை சில கட்சியினர் தொடங்கியுள்ளனர். இணையதளம், பணப்பரிமாற்ற செயலிகள் மூலம் பணப்பட்டுவாடா செய்ய அதிமுக கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக, கோவை மாவட்டத்தில் இந்த முறையை பயன்படுத்தி பணப்பட்டுவாடா செய்யும் முயற்சி நடப்பதாக திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சந்தேகத்திற்குரிய வகையில் 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக நடக்கும் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கியின் உதவியுடன் அதிகாரிகள் கண்காணித்துவருவதாக பதில் அளித்துள்ளார்.
மேலும் சட்டவிரோதமான மற்றும் சந்தேகத்திற்குரிய பண பரிமாற்ற பரிவர்த்தனைகள் குறித்த தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாகு தெரிவித்துள்ளர். பரிவர்த்தனை நடந்த சம்பந்தப்பட்ட வங்கிகளின் பெயர், யாருக்கு தொகை விநியோகிக்கப்பட்டது, எந்தக் கணக்கிலிருந்து தொகை மாற்றப்பட்டது போன்ற விவரங்கள் தெரிவித்தால், விரிவான விசாரணை நடத்தப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.
அத்துடன், தமிழக அமைச்சர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் உடனடியாக தடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தகுந்த நடவடிக்கைளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை கட்டுப்படுத்துவதில் இன்னொரு சிக்கலும் எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுகையின் கீழ் வராத ரெப்கோ வங்கி மூலம் அதிமுக பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கக்கோரி ரெப்கோ வங்கியின் முன்னாள் இயக்குனர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகுவிடம் புகார் அளித்துள்ளார்.
Gpay உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை முழுமையாக யாரும் கட்டுப்படுத்த முடியாது என்கிறார் சைபர் குற்ற வழக்குகளை கையாண்டுவரும் வழக்கறிஞர் கார்த்திகேயன். நடைமுறையில் மாற்றத்தை கொண்டுவந்து, எல்லா பரிவர்த்தனைகளையும் கண்காணித்தால், பணப்பட்டுவாடாவை தடுக்க வாய்ப்புள்ளது என்கிறார் கார்த்திகேயன். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அதிமுக கட்சியினர் மறுத்துள்ளனர். தேர்தலின் போது அரசியல் கட்சியினர் செய்யும் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் இன்னும் அதிக முனைப்பு காட்ட வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாயமான முறையில் நடப்பதாக வாக்காளர்கள் உணர்வார்கள்.