சட்டமன்ற தேர்தலுக்குள் திமுக உடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை - முதல்வர் பழனிசாமி

சட்டமன்ற தேர்தலுக்குள் திமுக உடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை - முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

 • Share this:
  சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு 2-வது நாள் பரப்புரையை தொடங்கினார். சிங்காநல்லூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்கூடத்தை கோவையில் தொடங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியிருப்பதாகக் கூறினார்.

  பீளமேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பின்னர் கரியாம்பாளையம் சென்று அங்குள்ள பட்டத்தரசியம்மன் கோயிலில் வழிபாடு செய்தார். மேலும், அதிமுக தொண்டர் மலரவன் வீட்டில் தேனீர் அருந்தினார். அதையடுத்து அன்னூரில் பரப்புரை செய்த அவர், வீடு இல்லாத மக்களுக்கு காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்றும் தமிழகத்தில் ஏழை என்ற சொல் எதிர்காலத்தில் இருக்காது என்றும் கூறினார். நீட் தேர்வை வைத்து திமுக பொய் சொல்லி வருவதாகவும் முதலமைச்சர் சாடினார். பரப்புரையின்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு அதிமுக தொண்டர்களை முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

  பின்னர் மேட்டுப்பாளையத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, வாழை நாரில் இருந்து துணி, பிஸ்கட், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை 400 கோடி மதிப்பில் செயல்படுத்த உள்ளதாகவும், இதன்மூலம் வாழை விவசாயிகள் பயன்பெற முடியும் என்றும் கூறினார். திமுக-வினர் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை ஒருகாலத்திலும் நிறைவேற்றியதில்லை என்று சாடிய அவர், அதிமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து மக்களும் நன்மை பெறக் கூடிய வகையில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

  திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாததால், மக்கள் திமுகவை புறக்கணித்துவிட்டதாகவும் முதலமைச்சர் கூறினார். காரமடையில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அரங்கநாதர் கோயிலில் வழிபாடு நடத்திய முதலமைச்சர், தேவாலயத்தில் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.

  பின்னர் மாலையில் துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், சாய்பாபா காலனி ஆகிய இடங்களில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அதிமுக ஆட்சியைக் கலைப்பதற்காக ஸ்டாலின் எடுத்த அவதாரங்களை தவிடு பொடியாக்கிவிட்டதாகவும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் திமுக உடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறினார்.
  Published by:Vijay R
  First published: